மாசி மகம் | கும்பகோணம் பொற்றாமரை குளம் தெற்கு வீதியில் ஆதிகும்பேஸ்வரர் - சாரங்கபாணி சுவாமிகள் நேர் எதிர் சேவை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் மாசி மகத்தையொட்டி பொற்றாமரை குளம் தெற்கு வீதியில் ஆதிகும்பேஸ்வரர் - சாரங்கபாணி சுவாமிகளின் நேர் எதிர் சேவை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

மாசி மகத்தை யொட்டி 6 சிவன் கோயில்களில் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றமும், 26-ம் தேதி 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் நடைபெற்று, 12 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி மகாமக குளத்திலும், பெருமாள் கோயில்களில் தேரோட்டமும், சாரங்கபாணி சுவாமி கோயிலில் தெப்போற்சவம் பொற்றாமரை குளத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்த பின், குளத்தின் எதிரிலுள்ள காலசந்தி கட்டளை மண்டபத்தில் மாலை வரை இளப்பாறிவிட்டு, இரவு ஏகாசனத்தில் சிறப்பலங்காரத்தில் மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வீதியுலா புறப்பட்டனர். அப்போது பொற்றாமரைக்குளத்தின் தென்கரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி பெருமாள் தெப்போற்சவம் வலம் வந்தது.

அங்கு, ஆதிகும்பேஸ்வரர் சுவாமியும், சாரங்கபாணி பெருமாளும் நேர் எதிர் சேவை நிகழ்ச்சி பொற்றாமரை தெற்கு வீதியில் நடைபெற்றது. அப்போது ஆதிகும்பேஸ்வரரிடமிருந்து பூவும், சாரங்கபாணி சுவாமியிடமிருந்து துளசி மற்றும் தீர்த்தத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டனர். பின்னர் ஒரே நேரத்தில் 2 பேருக்கும் தீபாராதனை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சைவமும், வைணவமும் ஒன்று தான், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது எனப் பக்தர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் கோ.கிருஷ்ணக்குமார் மற்றும் ச.சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE