ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா: ஆட்சியர், எம்.பி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மாசி மாத தேரோட்டத் திருவிழாவை இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழ்வு ஆண்டுக்கான விழாவுக்கான அங்குரார்ப்பணம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது, பிறகு 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு, வாகன உற்சவங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின் சந்திரசூடேஸ்வரர் மேள, தாளம் முழங்க வீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், சந்திர சூடேஸ்வரர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை ஓசூர் தேர்பேட்டையில் நடந்தது. முன்னதாக, விநாயகரின் சிறிய தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்திர சூடேஸ்வர சாமியின் பெரிய தேரினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், எம்.பி செல்லகுமார், எம்எல்ஏ ஓய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, உதவி ஆட்சியர் சரண்யா, ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, தேர் கமிட்டி தலைவர் மனோகரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்

தொடர்ந்து, பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். பின்னர், மரகதாம்பிகை அம்மனின் தேர் இழுத்து செல்லப்பட்டது. தேர்பேட்டை வழியாக இழுத்து செல்லப்பட்டு மீண்டும் அதே இடத்தில் தேர் நிறுத்தப்பட்டது. தேர்த் திருவிழாவில், ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பொதுமக்கள் ஆங்காங்கே நீர்மேர், ஜூஸ், தண்ணீர் வழங்கினர். மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பொது மக்கள் வீசி செல்லும் குப்பைகளை உடனக்கு உடன் அப்புறுத்தப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE