ஏழுமலையான் தரிசன டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் நேற்று காலை தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் நடந்தது. ஒரு மணி நேரத்தில் 26 பக்தர்களின் கருத்துகளை கேட்ட பிறகு திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:

மலையேறி நேர்த்தி கடன் செலுத்தி சுவாமியை தரிசிப்பவர்களில், சுமார் 60 சதவீதம் பேர் ஏற்கனவே விஐபி பிரேக், தர்ம தரிசன டோக்கன், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் அல்லது, ஏதாவது ஒரு ஆர்ஜித சேவா டிக்கெட் போன்றவற்றை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர். இவர்களில் வெறும் 40 சதவீதம் பேர்தான் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் மலையேறி திருமலைக்கு வருகின்றனர். ஆதலால், எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் வருவோருக்கு மட்டும் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அதற்காக புதிய சாஃப்ட்வேர் தயாரிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் மிக சிறந்த தானமாகும். மூளை சாவு அடைந்தால், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவர்களது குடும்பத்தார் முன் வரவேண்டும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

திருப்பதி கோயிலில் கடந்த மாதம் 18.42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ. 114.29 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE