தெய்வத்தின் குரல்: குற்றமும் குணமும் மனித இயல்பு

By செய்திப்பிரிவு

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தர்மப்படி வாழ்வு நடந்த வேண்டுமானால், சகல காரியங்களிலும் விதிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ரொம்பவும் அவசியம். ஆனால் அவற்றை அவர்களாக ஏற்று, சுயேச்சையாகப் பின்பற்றுவதே அழகு. ஒருவரை நிர்பந்தப்படுத்தி விதிகளை அநுசரிக்கச் செய்வதில் பெருமை இல்லை. ‘சம்பிரதாயம்’ என்பது தானாக வழிவழியாக வந்திருக்கிறது. மக்கள் அதைத் தாமாக ஏற்றுப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். சம்பிரதாயத்தில் வந்துள்ள அத்தனை விதிமுறைகளையும் சாஸ்திரத்தில் சட்டம்போல் எழுதி வைக்கவில்லை. சட்டம் என்று எழுதிவிட்டால் அது நிர்பந்தமாகிவிடுகிறது என்பதே காரணம். ‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ (ஆயிரம் விஷயங்களை வாயால் எடுத்துச் சொல்லு; ஆனால் ஒன்றைக்கூட எழுத்திலே எழுதி வைத்துக் கட்டாயப்படுத்தாதே) என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போது ‘இதைச் செய், அதைச் செய்’ என்று எதற்கெடுத்தாலும், எங்கே பார்த்தாலும் நோட்டீஸ் போடுவதும், எழுதி வைப்பதுமாக இருக்கிறது. நான் பூஜை செய்கிற இடத்திலேயே ‘பேசாதே, சட்டை போட்டுக் கொள்ளாதே’ என்றெல்லாம் எழுதி வைக்கிறீர்கள். இனிமேலே இப்படிச் செய்ய வேண்டாம்.

நான் இப்படி விதி மாதிரி உங்களைக் கண்டித்து, நிர்பந்தப்படுத்திச் சொல்லும்போது, நானே இதுவரை சொன்ன நல்ல விதியை மீறுகிறேன்.

‘செய்ய வேண்டாம்’ என்கிற போதே நிர்பந்தமாகச் சட்டமாக்கி விடுகிறேன். அது தப்புதான். ‘இப்படியெல்லாம் எழுதலாமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்’ என்று நான் சொல்லியிருந்தால் அதுதான் முறை.

தேய்ந்து போன சந்திரனுக்கு மரியாதை

‘ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாதே. சிறிது குண விசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும்’ என்பது பெரியோர் உபதேசம். பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது; அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்துபோன சந்திர கலைக்கும்கூடக் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார். அதே ஈசுவரன் மகா கொடிய ஆலகால விஷத்தை யார் கண்ணிலும் தெரியாமல் தம் கண்டத்தில் ஒளித்து வைத்திருக்கிறார். இவ்வாறு தண்டி என்ற கவி கூறுகிறார்.

ஆனால் தோஷம் பார்க்கிறதும், அதைப் பெரிதுபடுத்திப் பேசுவதும் எழுதுவதுமே பொதுவில் தற்காலத்தில் மிக அதிகமாகியிருக்கிறது. அதிலும் நிறையப் படித்தவர்கள் நிறையக் குற்றம் காண்பார்கள். “குற்றம் கண்டுபிடிப்பதுதான் அறிவாளியின் காரியம். ‘வித்வான்’ என்றாலே ‘தோஷக்ஞன்’ என்று லட்சணம் சொல்லியிருக்கிறது” என்று இவர்கள் வாதம் செய்யலாம். ‘தோஷக்ஞன்’ என்றால் குற்றம் அறிந்தவன் என்றே அர்த்தம். குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்பவன் என்றல்ல. குற்றம் குறைகளை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் உள்ளவர்களுக்கும் இதை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஓயாமல் தோஷம் பாராட்டிக் கொண்டும் அதைப் பிரசாரம் பண்ணிக்கொண்டும் இருக்கக் கூடாது.

உபதேசிப்பதற்கு முன்னர்

தோஷமுள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நமக்குப் பூரண யோக்கியதை இருக்க வேண்டும். நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால், அது பிரயோஜனப்படாது. சில சமயங்களில் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்னைவிட வீம்பாகத் தங்கள் தவற்றை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். ‘நமக்கு யோக்கியதை இருக்கிறது. ஸ்தானம் இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும்’ என்று நிச்சயமானாலே பிறருக்கு உபதேசிக்கலாம்.

ஒருவரது நல்ல அம்சத்தைக் கொண்டாடுவதால் அவருக்கு மேலும் உற்சாகம் உண்டாகிறது. இந்தக் குணங்களை விருத்தி செய்து கொள்கிறார். ஆனாலும் ஒருவரைப் புகழுவதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாக ஸ்தோத்திரம் செய்து, ஒருவரை அகங்காரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால்தான் பெரியோர்கள், “ஈசுவரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம்; பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும்; (சவாரி முடிந்த பின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல்) வேலையை முடித்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம்; பிள்ளையை ஒரு போதும் புகழக் கூடாது” என்றார்கள்.

இப்போது, நான் உங்கள் மேல் குற்றப் பத்திரிகை படித்ததற்கும் சமாதானம் சொன்ன மாதிரி ஆகிவிட்டது. தன் சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக் கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொன்னதால், நான் உங்களைத் தோஷம் சொன்னதிலும் தோஷமில்லைதான்.

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்