அ
தென்ன தலைப்படும் மறைபொருள்? புலனாகும் பொருள், புலனாகாப் பொருள் என்று பொருள் (substance) இரண்டு தன்மை உடையது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களில் ஏதோ ஒன்றின் வரம்பில் சிக்கிக் காட்சிப்படும் பருப்பொருள் புலனாகும் பொருள். ஐம்புலன் வரம்புக்கு அப்பாற்பட்டு, காட்சிக்கு அப்பால் மறைந்து நிற்கும் அருப்பொருள் புலனாகாப் பொருள். இந்தப் புலனாகாப் பொருள்தான் மறைபொருள் என்று வழங்கப்படுகிறது.
பார்த்த பொருளை இன்னதென்று வரையறை செய்துவிடலாம். ஆனால் பார்க்காத பொருளை, புலன்களுக்கும் புலன்கள் வழி வந்த அறிவுக்கும் அப்பால் நிற்கிற பொருளை, இன்னதென்று எப்படிச் சொல்வது? பெயரும் இல்லை, உருவமும் இல்லை என்று மொட்டையாக நிற்கிற ஒன்றுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்; எத்தகைய உருவம் வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளலாந்தானே?
ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும்இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
(திருவாசகம்,
திருத்தெள்ளேணம், 1)
என்று அவ்வாறு கற்பித்துக் கொள்வதற்கு உரிமமும் வழங்கிவிடுகிறார் மாணிக்கவாசகர். அது, தான் ஆகலாம்; தனது ஆகலாம்; தான்-நான் என்று வேறுபாடு காட்டாத அந்தரம் ஆகலாம். அது அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கும் அப்பால். அதைத் தேவே என்று சொன்னாலுந்தான் என்ன பிழை? சொல்கிறார் வள்ளலார்.
...தானாகித் தனதாகித் தான்-நான் காட்டா
அந்தரமாய், அப்பாலாய், அதற்குஅப் பாலாய்,
அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே.
(திருவருட்பா, முதல் திருமுறை, மகாதேவமாலை, 21)
சிலர் கடவுள் என்றும் இறைவன் என்றும்கூட அதனைச் சொல்கிறார்கள். இன்னதென்று அறிந்திராத ஒன்றை என்ன பெயரிட்டு அழைப்பது என்கிற மயக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். பெயரில் என்ன இருக்கிறது? ஆனால் அதைப் பற்றிக்கொண்டால் பிழைக்கலாம், கடைத்தேறலாம் என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே? எனில், அது இருக்கிறதா இல்லையா? இருக்கிறதென்றால் என்ன தன்மையில் இருக்கிறது? என்ன செய்துகொண்டிருக்கிறது? அதன் இருப்புக்கு என்ன நோக்கம்? யார் கண்டார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது? கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!
...இன்றே என்னின் இன்றே ஆம்;
உளதுஎன்று உரைக்கின் உளதே ஆம்;
நன்றே நம்பி குடி வாழ்க்கை!
நமக்கிங்கு என்னோ பிழைப்பம்மா!
(கம்ப இராமாயணம், யுத்தகாண்டம், கடவுள் வாழ்த்து)
-என்கிறான் கம்பன். இல்லை என்றால் இல்லை; இருக்கிறது என்றால் இருக்கிறது. நாம் நம்புகிற ஒன்றின் நிலைமை இதுதான் என்றால், அதைப் பற்றிக்கொண்டு எவ்வாறு நாம் உய்வடைந்து பிழைக்க?
பார்க்கத் தவறிவிட்ட நுண்மை
இதுவரையிலும் அறிந்திராத மறைபொருள் என்றாலும் தேட்டத்தை நாம் விட்டுவிடுவதில்லை. தெரியாதவற்றைத் தேடுவதுதான் அறிவு. இன்னதென்று தெரியாத மறைபொருளை என்னவென்று தெரிந்துகொள்வது? தெரிந்து கொள்வதற்குப் புலன்கள் பயன்படாதென்றால் வேறு எதன் வழியாகத் தெளிந்துகொள்வது? தேடிக்கொண்டே இருக்கிறோம். மறைபொருளைத் தலைப்படுதல் என்பது இதுதான்.
பார்க்காத பொருள் மட்டுந்தான் மறைபொருள் என்றில்லை; நாளும் நாள் பார்த்துப் பழகிய பொருள்களிலும்கூட நாம் இதுவரை பார்க்கத் தவறிவிட்ட நுண்மை இருக்கிறது. வெளிப்படப் புலனாகும் பகுதி மட்டுமே ஒன்றைப் பொருள் ஆக்காது; அந்த ஒன்றுக்குள் வெளிப்படாமல் மறைந்திருக்கும் பக்கமும் சேர்ந்துதான் அதனைப் பொருள் ஆக்கும். மாமல்லபுரத்திலிருக்கும் வெண்ணெய் உருண்டைப் பாறை என்பது பாறையின் வெளிப்பட்டுத் தெரியும் உருண்டைப் பகுதி மட்டுமல்ல; வெளிப்படாமல், இன்னும் யாராலும் புரட்டிப் பார்க்கப்படாமல் இருக்கும் அதன் அடிப்பகுதியும்தான்; குடைந்து பார்க்கப்படாமல் இருக்கும் அதன் உட்பகுதியும்தான். எந்த ஒன்றையும் உள்ளும் புறமுமாக முற்றாகப் பார்க்காமல் ‘பார்த்துவிட்டேன், நான் அறிவேன்’ என்று குதிப்பது அறியாமை.
உண்மை என்பது உளதாகும் தன்மை. உள்ளவற்றை உள்ளவாறு அறிதலே உண்மையை அறிதல். பார்த்தவை மட்டுமே உண்மை; பார்க்காதவை எல்லாம் பொய் என்று போதிய விசாரணையின்றி மட்டையடியாகச் சொல்லிவிட முடியாது; பார்த்தவற்றில் சில பொய்யாகவும் இருக்கலாம்; பார்க்காதவற்றில் சில உண்மையாகவும் இருக்கலாம். திருமூலர் திருமந்திரம் இவ்வாறான உண்மைகளை விளக்கி அறிக்கை இட முயல்கிறது.
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கிஇட் டேனே. (திருமந்திரம், 90)
ஓர் அறிதல் செயல்பாட்டில் மூன்று கூறுகள் தொடர்புடையன: அறியப்படும் பொருள், அறிதல் என்னும் செயலின் விளைவாக வருகிற அறிவு, அறிகிறவன் ஆகியன. வடமொழியில் இவை மூன்றையும் முறையே ஞேயம், ஞானம், ஞாதுரு என்பார்கள். அறியப்படும் பொருளாக அமைவன எவை என்று பார்த்தால், மூலச் சடப்பொருளாகிய மாயை, அந்த மூலச் சடப்பொருளிலிருந்து பல்வேறு சில்லுண்டிப் பொருள்களாக விரிந்து உருவாகி இருக்கிற இந்த உலகம், இந்தப் பொருட்கூட்டத்தை இயக்கும் சதிக்கூட்டம், இவற்றுக்கெல்லாம் மேலாகப் பரம்பொருளாக, அப்பாலைப் பொருளாக நிற்கிற செம்பொருட் சிவம் ஆகியவை. இவை எல்லாவற்றையும் முற்றாக விளக்கி இடவே முயன்றேன் என்று திருமூலர் வாக்குமூலம் அளிக்கிறார்.
தன்னுள்ளே நின்று தான்
இவற்றில் மூலச் சடப்பொருளை, அதிலிருந்து முளைத்தெழுந்த பல்வேறு சில்லுண்டிப் பொருள்களை, நுண்மையாய் நின்று இவற்றையெல்லாம் இயக்கும் சத்திக் கூட்டத்தையும்கூட அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் அப்பாலைப் பொருளாய், மறைபொருளாய், செம்பொருளாய் நிற்கிற ஒன்றை அறிவது எப்படி என்ற திகைப்பு உருவாகுந்தான்.
தன்னுள்ளே உலகங்கள் எவையும் தந்துஅவை
தன்னுளே நின்று தான் அவற்றுளே தங்குவான்;
பின்னிலன்; முன்னிலன்; ஒருவன்; பேர்கிலன்;
தொன்னிலை ஒருவரால் துணியற் பாலதோ?
(கம்ப இராமாயணம், இரணியன் வதை: 59)
உலகங்கள் எல்லாவற்றையும் தந்தவன் அவன்; உலகங்கள் அவனுக்குள் தங்கியிருக்கின்றன; அவன் அவ்வுலகங்களுக்குள் தங்கியிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் யாருமில்லை. அவன் ஒருவன். எப்போதும் நிலை பெயராதவன். அவனுடைய தொன்மை நம்மால் அறியத்தக்கதா? என்று அந்த அப்பாலைப் பொருளை அறிகிற முயற்சியையே கைவிட்டு நம்பத் தலைப்பட்டுவிடுகிற பக்தி நெறியைப்போல அல்லாமல், அறிதல் முயற்சியை ஊக்குவிக்கிறார் திருமூலர்.
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை;
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை;
இல்லை எனினும் பெரிதுஉளன் எம்இறை;
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே. (திருமந்திரம், 2103)
அறியுங்கள். எவ்வளவு தொலைவுக்கு உங்கள் அறிவு செல்லுமோ செலுத்துங்கள். எட்டிய தொலைவு என்ன, உங்களுக்குக் கிட்டிய பொருள் என்ன என்பதை மெய்யாகவே விளக்குங்கள். மறைபொருள் என்று ஒன்று இல்லை என்னும் முடிவுக்கு நீங்கள் வந்தாலும், மறைபொருள் பெரிதும் உண்டு. அதை அறியமுடியாமல் போவதற்குக் காரணம், அதனுடைய இன்மை அன்று; அறியும் முயற்சியின் போதாமை. அறியும் முயற்சியைப் போதுமானதாக ஆக்கிக் கொள்வதற்குப் பொருத்தமான நெறியை நாடுங்கள் என்று முன்னுரைத்துக்கொண்டு நெறி சொல்கிறார் திருமூலர்.
(திருமூலரைத் தொடர்வோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago