சேலத்தில் மகா சிவரத்திரி விழா: 1,50,008 ருத்ராட்சதையில் 13 அடி உயர சிவலிங்கம் அமைத்து வழிபாடு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோயில்களில் விடிய விடிய நடந்த அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன் அஸ்தமனமாகும் காலம் என்பார்கள். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது, ஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள்கண்டம் என்று சொல்வார்கள். அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை ரட்சிக்கும் படிக்கு அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

பிரதோஷ வேளையில் நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டும், சந்திரனைத் தேய்ந்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும்போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை எற்படுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேகம், ஆராதனை மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. விடிய விடிய சிவாலயங்களில் நடந்த அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சேலம், சுகவனேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை, தங்ககவச சாத்துபடி நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புஷ்ப அலங்காரம், நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அபிசேகம், தாழம்பூ சாத்துபடி மற்றும் இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை, அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதேபோல, கரபுரநாதர் சுவாமி கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் வாசவி கிளப் , சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் ஆரிய வைசியா சமாஜம் சார்பில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரத்தி எட்டு ருத்ராட்சதையில் 13 அடி உயரத்தில், சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு ருத்ராட்சத சிவலிங்க தரிசனத்தில் பக்தர்கள் திரளாக ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE