தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி சண்முக நதிக்கரையில் 23 அடிக்கு வேல்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி சண்முக நதிக்கரையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 23 அடி உயரத்திற்கு ஐம்பொன்னால் ஆன வேல் நிறுவப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் பழநி சண்முக நதி மற்றும் இடும்பன் குளத்தில் புனித நீராடி விட்டு மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மெய் தவ பொற்சபை சார்பில் சண்முக நதியை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வலியுறுத்தி, சண்முக நதியின் கரையில் 23 அடி உயரத்திற்கு ஐம்பொன்னால் ஆன வேல் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர 4 அடி உயரத்திற்கு கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வேல் நிறுவப்பட்டுள்ளது. இந்த வேல்களுக்கு தினமும் மாலை சிறப்பு ஹோமம் மற்றும் ஆராதனை செய்யப்படுகிறது. சண்முக நதியில் புனித நீராடும் பக்தர்கள் இந்த வேல்களை வணங்கிவிட்டு மலைக்கோயிலுக்கு செல்கின்றனர்.

தங்கரதப் புறப்பாடு நிறுத்தம்

பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெரியநாயகிம்மன் கோயிலில் பிப்.3-ம் தேதி இரவு திருக்கல்யாணமும், அன்று இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம் நாளான பிப்.4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு நாளைமறுநாள் (பிப்.2) முதல் பிப்.6-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE