கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து 2,500 பேர் செல்ல முடிவு: ராமேசுவரம் பங்குத்தந்தை தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் இந்தியாவிலிருந்து 2,500 பேர் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை தேவ சகாயம் தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா குறித்து இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரிடம் இருந்து ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் தேவாலய பங்குத்தந்தை தேவசகாயத்துக்கு கடிதம் வந்துள்ளது. அதில், கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் இந்தியாவிலிருந்து 3,500 பேர் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பங்குத்தந்தை தேவசகாயம் மற்றும் மீனவ சங்கத் தலைவர்கள் எமரிட், சகாயம் உள்ளிட்டோர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு அளித்தனர். அதில், கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து செல்வோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர், பங்குத்தந்தை தேவசகாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மறைமாவட்ட ஆயர் வழிகாட்டுதலுடன் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்க உள்ளது. 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இலங்கை அரசு 3,500 பேர் இந்தியாவிலிருந்து வரலாம் எனக் கூறியுள்ளது. இருந்தபோதும் கச்சத்தீவில் படகு இறங்குத்தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் 60 விசைப் படகுகளில் 2,500 பேர் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஒரு விசைப்படகில் 35 பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

கச்சத்தீவில் உணவு, தண்ணீர், மக்கள் தங்க கூடாரம் போன்ற வசதிகளை இலங்கை அரசு செய்து கொடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். விழாவில் பங்கேற்க விரும்புவோருக்கு பிப். 2, 3-ம் தேதிகளில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பிப்.10-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த படிவத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் அரசு அலுவலர்கள் என்றால் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி), அரசு ஊழியர் இல்லாதவர்கள் என்றால் காவல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE