பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.4-ம் தேதி தேரோட்டம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாத யாத்திரைக்கு புகழ்பெற்ற பழநி தைப்பூசத் திருவிழா, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட பெரியநாயகிம்மன் கோயிலில் இன்று (ஜன.30) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கொடியேற்றத்தை ஒட்டி கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மயில், வேல் உருவம் பொறித்த கொடிக்கு தீபாராதனை செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தைப்பூச விழாவின் ஆறாம் நாளான பிப்.3-ம் தேதி இரவு திருக்கல்யாணமும், அன்று இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம் நாளான பிப்.4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்ந்து, தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. பத்தாம் நாளான பிப்.7-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தில், கோயில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE