மதுரையில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. பிப்.4-ம் தேதி வரை 12 நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் முன் சிம்மாசனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.

6-ம் நாள் (ஜன.29) திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது. ஜன.31-ல் எல்லீஸ் நகரில் வலைவீசும் படலம் நடைபெறும். பிப்.2-ம் தேதி காலை கோயிலிலிருந்து புறப்பாடாகி காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலை அடைந்து,

தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பிப்.3-ம் தேதி சிந்தாமணியில் கதிர் அறுப்புத் திருவிழா நடைபெறுகிறது. 12-ம் நாள் திருவிழாவாக (பிப்.4) தெப்ப உற்சவத்தை முன்னிட்டு காலை 5 மணி யளவில் கோயிலிலிருந்து புறப்பாடாகி முக்தீஸ்வரர் கோயிலை அடைந்து காலை 10.35 முதல் 10.59 மணி வரை தெப்பத்தில் இருமுறை எழுந்தருள்கின்றனர்.

மாலை தெப்பக்குளம் மைய மண்டபத்தில் அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும் எழுந் தருளுகின்றனர். தீபாராதனை முடிந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவில் வலம் வந்து அருள்பாலிப்பர். பின்னர் அங்கிருந்து அம்மன், சுவாமி புறப்பாடாகி கோயிலில் சேத்தியாவர்.

இத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE