ஓஷோ சொன்ன கதை: நீங்கள் தெய்வீகமாய் இருக்கிறீர்கள்

By ம.சுசித்ரா

நம் அனைவருக்கும் இருப்பது போலவே சூஃபி ஞானி முல்லா நஸ்ரூதினுக்கு மரணம் என்றால் பயம்.

ஊரில் யாரோ ஒருவர் இறந்துவிட்டதாக முல்லா கேள்விப்பட்டார். பயத்தில் நடுநடுங்கி வீடு திரும்பியவர் தன்னுடைய மனைவியிடம் கேட்டார், “நான் செத்துவிட்டேன் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது, அதை உன்னால் எனக்குச் சொல்லித்தர முடியுமா? அதற்கு என்ன அறிகுறி? மரணம் என்னைத் தேடி வந்துவிட்டது என்பதை நான் எப்படிக் கண்டுபிடிப்பது?”

முல்லாவின் மனைவி சொன்னார், “நீங்கள் சரியான முட்டாள். நீங்கள் சாகும்போது உங்களுக்குத் தெரிந்துவிடும். முதலாவதாக, நீங்கள் சில்லிட்டுப்போவிடுவீர்கள்….”

தனக்குள் பேசிக்கொண்ட முல்லா

சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள், தன்னுடைய வயல்வெளியில் முல்லா வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அன்றைய தினம் அதிகமாகக் குளிர் அடித்தது. முல்லாவின் கை சில்லிட்டுப்போனது. “நான் செத்துக்கொண்டிருக்கிறேன் போலும்” என நினைத்துக்கொண்டார் முல்லா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கத் தொடங்கினார். “மரணமடைந்த மனிதனைப் போல நான் நடந்துகொள்ள வேண்டும். இனி இந்த உடல் வெறும் உடல் மட்டுமே. நான் செத்துவிட்டதாகத்தான் அறிகுறிகள் சொல்லுகின்றன. செத்துப்போன மனிதன் என்ன செய்வான்? அதைப் பற்றித்தான் இனி நான் யோசிக்க வேண்டும்.”

இறந்த மனிதன் தரையில் கிடப்பான். ஆகவே, தரையில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டார். அப்போது அந்த வழியாகச் சிலர் கடந்து சென்றனர். தரையில் கிடந்த முல்லா இறந்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். “நான் சாகவில்லை” எனச் சொல்ல நினைத்தார் முல்லா. ஆனால் பிணத்தால் பேச முடியாதல்லவா!

“நான் இப்போது பேசினால் செயற்கையாக இருக்கும்” எனத் தனக்குள்ளேயே பேசிக்கொண்டார் முல்லா.

இறந்தவனால் உதவ முடியாதே!

முல்லாவைக் கல்லறைக்குத் தூக்கிச் செல்ல அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால் அந்த ஊருக்கு அவர்கள் புதியவர்கள். அந்த வழியாகச் சென்றார்களே தவிர அந்த ஊரில் எந்தத் திசையில் கல்லறை இருக்கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. உள்ளூர்வாசியான முல்லாவுக்குக் கல்லறை எங்கே இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். தானே தன்னைப் புதைக்க வேண்டிய கல்லறைக்கான பாதையைச் சொல்லலாமா என யோசித்தார். ஆனால் அப்படிச் செய்யக் கூடாதே! யாராவது தன்னிடம் கேட்காமலா போய்விடுவார்கள்! அப்போது சொல்லலாம் என்று மவுனம் காத்தார்.

பொழுது சாய்ந்தது, இருட்டத் தொடங்கியது. ஆனால் யாருமே முல்லாவிடம் வழி கேட்கவில்லை. அவர்களைக் கவலை பிடித்துக்கொண்டது. “ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். நான் உதவ வேண்டுமே” என முல்லா நினைத்தார். ஆனால் செத்தவனால் உதவ முடியாதே! இருட்டியது. “சடலத்தை அப்படியே போட்டுவிட்டும் போக முடியாது. இவருடைய வீடு எங்கிருக்கிறது என்பதோ அல்லது கல்லறை எங்கிருக்கிறது என்பதோ தெரியவில்லையே. இப்பொது என்னதான் செய்ய?” என அவர்கள் யோசித்தார்கள். அப்போது, “நான் இறந்தவன் என்பதால் பேசக் கூடாது. நான் உங்களுக்கு வழி சொல்லச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் நீங்கள் அனுமதித்தால் என்னால் உங்களுக்கு வழி காட்ட முடியும். அதற்குப் பிறகு நான் பேச மாட்டேன்” எனப் பேசினார் முல்லா.

நீங்கள் இல்லை என்கிற நிலையை அடையும்போது ,‘நீங்கள் இல்லை’ என்றுகூட உங்களால் சொல்ல முடியாது. ஆக உண்மையாக, முற்றிலுமாக நம்மை ஒப்புக்கொடுக்கும் நிலை என்பது, ‘நான் இல்லை’ என்பது மட்டுமே. அந்த நிலையை எட்டிய பிறகு இருப்பது தெய்வ நிலை மட்டுமே. ‘நீங்கள்’ இல்லாதபோது உங்களுக்கும் தெய்வநிலைக்கும் இடையில் இடைவெளியே இருக்காது. ஏனென்றால் நீங்கள் உங்களுடைய ’நான்’ என்பதை இழக்கும்போது தெய்வீகத்தன்மையை அடைகிறீர்கள். ஆக, ஒன்று நீங்கள் இருப்பீர்கள் அல்லது தெய்வீகம் இருக்கும். ஆக, இறுதியாக இருப்பது ‘நான் அற்ற ஒரு இருப்பு’ (amness) மட்டுமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்