திருப்பாவை காட்டும் திருப்பாதை

By செய்திப்பிரிவு

திருப்பாவை பாசுரங்களில் ‘பறை’ என்ற சொல் பதினொரு பாசுரங்களில் வருகிறது.பாவை நோன்புக்கு அனைவரையும் அழைக்க பறை வேண்டும் என்று கூறி திருப்பாவையின் முழு சாரத்தையும் அதில் நமக்கு கொடுத்துவிட்டாள் ஆண்டாள்.

திருப்பாவை முதல் பாசுரத்தில் தொடங்கி வரிசையாக 8, 10, 16, 24, 25, 26, 27, 28-ம் பாசுரம் வரை நம்மை ‘பறை’யை யூகிக்க வைத்து 29-ம் பாசுரத்தில் பறை என்பது திருமாலுக்கு என்றென்றும் சேவை செய்வதே, நாம் அடைய வேண்டிய பிறவிப் பயன் அதுவே என்ற உட்பொருளை உணர்த்தி, 30-ம் பாசுரத்தில் பலனை கூறி நிறைவு செய்கிறாள்.

முதல் பாசுரத்தில் ‘‘நாராயணனே நமக்கே பறை தருவான்”(பா-1) என்று தொடங்குகிறாள். ‘பெரியாழ்வார் போலத் திருமாலுக்குப் பல்லாண்டு பாடுவதையே நித்தியக் கைங்கரியமாகச் செய்ய வேண்டும்’ என்பதை ‘பாடி பறைக் கொண்டு’ (பா-8) என்கிறாள்.

அடுத்து ‘நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்’(பா-10) - ‘நம்மால்’ - நம்மைப் போன்ற சாதாரண ஆயர் குலப் பெண்கள் போற்றினாலும், அவன் ‘பறை’ தருவான். ஏன் என்றால் அவன் ‘நம் மால்’ என்கிறாள்.

‘அறைபறை கண்ணார்' என்று திருக்குறளில்(1180) ஒரு சொல் வருகிறது. அறைந்து கூறும் பறை போன்றகண்களையுடையவர். அதாவது உள்ளத்தின் ஆசையை அறையப்படும் பறை போன்று கண்களே காட்டிக் கொடுத்துவிடும் என்று பொருள். ‘அறைபறை ஆயர் சிறுமியர்’ (பா-16) - கண்ணனுக்கு சேவை செய்வதே எங்கள்ஆசை. எங்கள் கண்களை பார்த்தாலே அந்த ஆசை தெரிந்துவிடும் என்கிறார்கள்.

மேலும் ‘என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்’ (பா-24) என்பதில், பெரியாழ்வார் ‘சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே’ என்று சுற்றிச்சுற்றி வந்து, காலம் உள்ளவரை, பல்லாண்டு பாடுவதை ஆண்டாள் நமக்கு நினைவூட்டுகிறாள்.

‘உன்னை அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்’ (பா-25) பாசுரத்தில் ‘பேராசையுடன் உன்னையே கேட்டு உன்னிடத்தில் அந்த திருமகளே உகக்கும் கைங்கரியமாகிய செல்வம் வேண்டி வந்தோம்’ என்கிறார்கள்.

‘சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே’ (பா-26). பல்லாண்டு பாடுவதில் பெரியாழ்வாருக்கு நிகர் யாரும் இல்லை. அதுபோல எங்களுக்கு உன்னைப் போற்றிப் பாடும் மிக உயர்ந்த கைங்கரியத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

‘உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்’ (பா-27) என்பதில் உன் திருநாமங்களைப் பாடுவதையே பயனாகக் கருதி பாரோர் புகழ, நாடு புகழும் பரிசாக ராமர் பட்டாபிஷேகத்தின்போது சீதை அனுமாருக்குப் பரிசாகக் கொடுத்த முத்து மாலை போல நீ எங்களுக்குத் தர வேண்டும் என்கிறாள்.

‘இறைவா! நீ தாராய் பறை’ ( பா-28) ‘அறிவு ஒன்றும் இல்லாத’எங்களுக்கு ‘குறை ஒன்றும் இல்லாத’ நீ, எங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்ற தகுதியைப் பார்த்துத் தந்தாலொழிய எங்களுக்கு வேறு கதி இல்லை என்கிறாள்.

‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ (பா-29) உன் விருப்பப்படி இன்றும், என்றும், எப்போதும் உனக்கே குற்றேவல் என்ற அணுக்கத் தொண்டு செய்வதே எங்கள் விருப்பம் என்று பறையின் உட்பொருளைக் கூறி, நிறைவுப் பாசுரத்தில் ‘‘அங்கு அப் பறை கொண்ட ஆற்றை”(பா-30) திருப்பாவை முப்பதையும் சொன்னால் இங்கும் அங்கும் எங்கும் எப்போதும் திருமாலின் திருவருள் பெற்று மறுமையில் கிடைக்க வேண்டிய இன்பத்தை இம்மையிலேயே பெற்று இன்புறுவர் என்று திருப்பாவை காட்டும் திருப்பாதையில் ‘பறை’ சாற்றுகிறாள் ஆண்டாள்.

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்