பாற்கடலில் இருப்பது போன்ற உணர்வு: தித்திக்கும் திருப்பாவை 27

By செய்திப்பிரிவு

பாற்கடலில் இருப்பது போன்ற உணர்வு

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே

பாடகமே, என்று அனைய பல்கலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம், அதன் பின்னே பால் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்!

விளக்கவுரை:

உன்னோடு கூடாதவர்களை வித்தகனாக வெற்றி கொள்ளும் கோவிந்தா!

(கூடுபவர்களிடம் எளியவனாக தோற்கும் கோவிந்தா!)

உன்னை வாயாரப் புகழ்ந்துபாடி பயனடைந்து நாங்கள் அடையும் பரிசு யாதெனில்... ஊராரெல்லாம் புகழ்ந்து கொண்டாடும்படியான

வளையல்களென்ன, தோள்வளைகளென்ன, தோடுகளென்ன,

அலங்காரமான கர்ணப்பூவென்ன, காலுக்கு பாடகமென்ன

எனப் பல ஆபரணங்களை நீ அணிவிக்க நாங்கள் நன்றாக அணிந்து கொள்வோம்!

நீ உடுத்து களைந்த ஆடைகளை உடுத்தியபின்,

பால் சோறு மறையும்படி நெய் இட்டு முழங்கையில் வழியும்படி உன்னோடு நாங்கள் கூடியிருந்து இன்புற்று மகிழ்வோம்!

(நோன்பு செய்ய அருளிய பொருட்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?)

இதையும் அறிவோம்:

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள், திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா வெண்ணெய்யும் நூறு தடா அக்கார அடிசிலும் செய்வதாகப் பிரார்த்திக்கிறாள். பிற்காலத்தில் ஸ்ரீ ராமானுஜர், ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்ற அழகருக்கு நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணெய்யும் சமர்ப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றிய அன்பு அண்ணனாகக் கருதி “வாரும் என் அண்ணலே”என்று ஆண்டாள் கூப்பிட, பல நூற்றாண்டுகள் கோதைக்கு இளையவரான ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்! இன்றும் ‘கூடாரவல்லி’ பாசுரத்துக்கு அக்கார அடிசில் செய்வது வழக்கமாக உள்ளது.

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE