விருத்தாசலம்/ராமநாதபுரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று மாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலைகோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன்பு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைக்காண ஆயிரம் கால் மண்டபம் முன்பும், சிவகங்கை குளம் அருகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. அப்போது, ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் 3 முறை முன்னும் பின்னும் ஆடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பஞ்சமூர்த்தி முத்து பல்லாக்கு வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில்பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றியுள்ள மேல வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள மரகத நடராஜருக்கு ஆருத்ராதரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி கோயிலில் தனி சந்நிதியாக விலைமதிக்க முடியாத பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த மரகத சிலைமேளம் முழங்கினால் உடைந்துவிடும் என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது.
மார்கழி ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் மட்டும் நடராஜர் சிலைமீது சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்பு களையப்படும். அப்போதுநடராஜரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச.28-ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு நேற்று முன்தினம் காலை களையப்பட்டு, 32 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து பச்சை மரகத மேனியாய் அருள் பாலித்த நடராஜரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். அன்று இரவு11 மணிக்கு மேல், மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகமும் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெற்றது.
சந்தன காப்பு: நேற்று அதிகாலை அருணோதய காலத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜரை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். எஸ்.பி. தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago