சிதம்பரத்தில் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆருத்ரா தரிசன தேரோட்டம்: உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் அபிஷேகம்

By செய்திப்பிரிவு

கடலூர் / ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. உத்தரகோசமங்கை கோயிலில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம்படி களையப்பட்டது. இந்நிகழ்வுகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும் மாலையும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ நடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சித் சபையில் இருந்து ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்பாள் மேளதாளம் முழங்கிட, தேவாரம், திருவாசகம் பாடிட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

‘சிவ சிவ’ முழக்கத்துடன் பக்தர்கள் தேர்களின் வடங்களைப் பிடித்து இழுத்தனர். 5 தேர்களும் கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி வடக்கு வீதி வழியாக மாலை 6 மணி அளவில் நிலையை வந்தடைந்தன. ஒவ்வொரு வீதிகளிலும் உபயதாரர்கள் மண்டகப்படி செய்தனர். சிவனடியார்கள் சிவ வாத்தியங்கள் முழங்கிட சிவ நடனம் ஆடியபடி சென்றனர்.

சிவனடியார்கள் தேவாரம் திருவாசகம் பாடியபடியும், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதியபடியும் சென்றனர். மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் சந்திப்பில் மரபு வழியாக நடைபெறும் நிகழ்வின் படி, பருவதராஜ குருகுல மரபினர் சுவாமிகளுக்கு பட்டு சாத்தி, படையல் செய்தனர்.

உத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்பு களையப்பட்டு
அருள்பாலித்த பச்சை மரகத நடராஜர். படம்: எல்.பாலச்சந்தர்

முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சிதம்பரத்தில் 10 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளைக் காணலாம். இங்கு விலைமதிக்க முடியாத பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை தனி சந்நதியாக அமைந்துள்ளது. ஆறு அடி உயரம் உடைய இச்சிலை மத்தளம் முழங்கினால் மரகதம் உடையும் என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. மார்கழி ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் மட்டும், நடராஜர் திருமேனி (சிலை) மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.

இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச.28-ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு நேற்று காலை 8 மணிக்கு களையப்பட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜருக்கு சந்தனாதி, கஸ்தூரி உட்பட 32 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து பச்சை மரகத மேனியாய் அருள் பாலித்த நடராஜரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மரகத நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது. இன்று (ஜன.6) அதிகாலை அருணோதய காலத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE