திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா இன்று தொடக்கம்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176-வது ஆராதனை விழா இன்று (ஜன.6) தொடங்குகிறது.

விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றுப் பேசுகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி, தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், சபா அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ரஞ்சனி- காயத்ரி குழுவினரின் இசை நிகழ்ச்சி, இரவு 7.20-க்கு குன்றக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாட்டு, 8 மணிக்கு ஜெயந்த் புல்லாங்குழல் இசை, 9 மணிக்கு காயத்ரி கிரிஷ் பாட்டு ஆகியவை நடைபெறும். இரவு 10 மணிக்கு திருமானூர் டி.சி.கணேசன் குழுவினரின் நாகசுர இசை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா நிறைவு பெறுகிறது.

11-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜர் சுவாமிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE