கண்ணன் அருள் பெற வேண்டும்: தித்திக்கும் திருப்பாவை - 20

By செய்திப்பிரிவு

கண்ணன் அருள் பெற வேண்டும்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்.

செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்.

செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்.

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கு

ஆபத்து வருமுன்னரே சென்று அவர்களின் நடுக்கத்தைப்

போக்கும் மிடுக்கை உடையவனே! எழுந்திரு!

அண்டியவரைக் காப்பவனே! வல்லமை உடையவனே!

பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் பரிசுத்தமானவனே! எழுந்திரு!

பொற்கலசம் போன்ற மென்மையான மார்பு, சிவந்த வாய்,

சிறுத்த இடையையும் உடைய குணபூர்ணையே!

திருமகளாகவே இருப்பவளே! நப்பின்னையே! எழுந்திரு!

விசிறியும், கண்ணாடியும் கொடுத்து உன் மணாளனான

கண்ணனையும் எங்களுக்குக் கொடுத்து உடனே எங்களை நீராட்டு.

(கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல் )

இதையும் அறிவோம்:

ஸ்ரீவடபத்ரசாயி சந்நிதியில் பகல் பத்து உற்சவம் நடைபெறும் கேரளத் தேசத்துக் கட்டிடக்கலையில் அமைந்துள்ள மண்டபத்தின் பெயர் ‘கோபால விலாசம்’. அங்கு தற்போது உள்ள திருவாடிப்பூரத் தேரில், முந்தைய திருவாடிப்பூரத் தேரிலிருந்த சிற்பங்களை பொருத்தியுள்ளனர். அதில் ராமாயண, தசாவதாரச் சிற்பங்கள், ஆண்டாள் ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் சென்ற காட்சி என பல அரியவகை சிற்பங்களைப் பார்க்கலாம். இச்சிற்பங்கள் சின்ன கோயில் வடிவில் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் உற்று கவனித்தால் நம் கைரேகைகள் போலத் தனித்துவமாக இருப்பது இதன் சிறப்பு.

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE