108 வைணவ திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், 101-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப்பெறும் ‘பல்லாண்டு’ மதுரையில்தான் இயற்றப்பட்டது என்பது தனிச்சிறப்பு. இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பெரியாழ்வார் பாசுரம்:
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
» 108 வைணவ திவ்ய தேச உலா - 97 | தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 99 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.
மூலவர்: கூடலழகர் | உற்சவர்: வியூக சுந்தரராஜர் | தாயார்: மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி | தல விருட்சம்: கதலி | தீர்த்தம்: ஹேம புஷ்கரிணி | விமானம்: அஷ்டாங்க விமானம்
தல வரலாறு: பிரம்ம தேவரின் புத்திரர் சனத்குமாரர். இவருக்கு திருமாலை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்ற, இத்தல பெருமாளை நோக்கி தவமிருந்தார். சனத்குமாரரின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி அளித்தார். சனத்குமாரர் உடனே தேவ சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, தனக்கு பெருமாள் அளித்த அருட்காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார்.
கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டுவிட்ட இத்தலம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. இதனால் ‘யுகம் கண்ட பெருமாள்’ என்றும் இத்தல பெருமாள் அழைக்கப்படுகிறார்.
கூடலழகர்: ஒருசமயம் மதுரையில் தொடர்ந்து மழை பெய்ததால், பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று குடி மழையில் இருந்து மக்களைக் காத்தன. அதன் காரணமாக இத்தலம் ‘நான்மாடக் கூடல்’ என்றும், ‘கூடல் மாநகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு ‘கூடலழகர்’என்ற பெயர் கிட்டியது. மதுரை தமிழ்ச் சங்கத்தில் ‘துவரைக் கோமான்’என்ற பெயரில் புலவராக பெருமாள் அமர்ந்திருந்ததாக பரிபாடல் உரைக்கிறது.
முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடிக் கொண்டிருந்தன. காலப்போக்கில் கிருதுமால் நதி சுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னன் சத்தியவிரதன், ஒருசமயம் கிருதுமால் நதியில் நீராடியபோது, பெருமாள் மீன் வடிவில் வந்து உபதேசம் செய்தார். தனக்கு அருளிய பெருமாளின் நினைவாக, பாண்டிய மன்னர் மீன் சின்னத்தை வைத்துக் கொண்டார்.
கோயில் அமைப்பும் சிறப்பும்: 96 வகையான விமானங்களில் அஷ்டாங்க விமானம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், மதுரையிலும், திருகோஷ்டியூரில் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. இத்தலத்தில் 125 அடி உயர அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. இதில் உள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழாது. மூன்று நிலைகளுடன் 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்தின் வடிவமாகும்.
பஞ்ச பூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிரகாரங்களுடன் கூடலழகர் கோயில் அமைந்துள்ளது. அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரண்டாவது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் ஆகிய முப்பெரும் தேவர்களும், அஷ்டதிக் பாலகர்களும் ஓவிய வடிவில் உள்ளனர். இதன் காரணமாக இந்த சந்நிதி ஓவிய மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவது நிலையில் பாற்கடல்நாதர் பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருள்பாலிக்கிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர் விமானத்தில் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் பக்தர்கள் விமான வலம் வருவது வழக்கம். உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு, சரியாகத் திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஏற்ப அனைத்திலும் வெற்றி பெறும் அழகராக பெருமாள் இருப்பதால் அவருக்கு இப்பெயர் கிட்டியது.
நவக்கிரக சந்நிதி
இத்தலத்தில் நவகிரகங்களின் சந்நிதி அமைந்துள்ளது தனிச்சிறப்பு. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார ஸ்லோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்தரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச:
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யே யிசேகர
இதை அடிப்படையாகக் கொண்டு ராமாவதாரம் - சூரியன், கிருஷ்ணாவதாரம் - சந்திரன், நரசிம்மவதாரம் - செவ்வாய், கல்கி அவதாரம் - புதன், வாமன அவதாரம் - குரு, பரசுராமாவதாரம் - சுக்கிரன், கூர்ம அவதாரம் - சனி, மச்ச அவதாரம் - கேது, வராக அவதாரம் - ராகு, பலராம அவதாரம் - குளிகன் என்று பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவையாக கூறப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வி அறிவு சிறக்க இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago