108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து
» 108 வைணவ திவ்ய தேச உலா - 99 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 98 | திருகுருகூர் ஆதிநாத பெருமாள் கோயில்
ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும்பாடித் தண்கோவலூர் பாடியாடக் கேட்டு
நங்காய் நங்குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே.
மூலவர்: நின்ற நாராயணப் பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) | தாயார்: செங்கமலத் தாயார் (கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி) | தீர்த்தம்: பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி | ஆகமம்: வைகானஸ ஆகமம் | விமானம்: சோம சந்திர விமானம்
தல வரலாறு: திருப்பாற்கடலில் திருமால் சயனித்திருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. அப்போது ஸ்ரீதேவியின் தோழிகள், “ஸ்ரீதேவி அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி. அவள் பெயரை முன்வைத்தே பெருமாள் ஸ்ரீநிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்று அழைக்கப்படுகிறார். இவளையே பெருமாள் தன் மார்பில் தாங்குகிறார். தேவேந்திரன் இவளால் பலம் பெறுகிறார், வேதங்கள் ஸ்ரீதேவியை திருமகள் என்று போற்றுகின்றன” என்றனர்.
உடனே பூமாதேவியின் தோழிகள், “இந்த உலகுக்கு ஆதாரமாக விளங்கும் பூமாதேவி மிகவும் சாந்தமானவள். பொறுமையின் சிகரம். பொறுமைசாலிகளை வெல்வது கடினம். இவளைக் காப்பாற்றவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்” என்று கூறினர்.
நீளாதேவியின் தோழிகள், “நீளாதேவி தண்ணீர் தேவதையாக உள்ளாள். தண்ணீரை ‘நாரம்’ என்று கூறுவதுண்டு. இதனால்தான் பெருமாளுக்கு ‘நாராயணன்’ என்ற பெயர் வந்தது. தண்ணீரை பாலாக்கி, அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து தாங்குபவள் நீளாதேவி. அதனால் நீளாதேவியே உயர்ந்தவள்” என்றனர்.
இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, ஸ்ரீதேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு (திருத்தங்கல்) வந்து தவம் புரிந்தார். ஸ்ரீதேவியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இத்தலத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, ஸ்ரீதேவியே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். இதனால் இத்தலம் ‘திருத் தங்கல்’ என்று அழைக்கப்படுகிறார்.
நின்ற நாராயணப் பெருமாள்: மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரன். அவனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருசமயம் கனவில் தோன்றிய ராஜகுமாரன் குறித்து தனது தோழி சித்ரலேகையிடம் கூறி, அவனை சித்திரமாக வரைந்து கொடுக்கும்படி கேட்டாள். பிறகு அவன் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் அநிருத்தன் என்பது தெரியவந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினாள் உஷை.
சித்ரலேகை தோழிக்காக துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை தூக்கிக் கொண்டு வாணாசுரன் மாளிகைக்கு வந்தாள். கண்விழித்துப் பார்த்த அநிருத்தனுக்கு ஏதும் புரியவில்லை. நடந்தவற்றை அறிந்து உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான்.
இதையறிந்த வாணாசுரன், மணம் புரிந்து கொண்டவர்களை கொல்ல முயன்றான். அப்போது அவர்களைக் கொன்றால் பாணாசுரனும் அழிந்து போவான் என்று அசரீரி ஒலித்தது. அநிருத்தனை சிறை வைத்தான் பாணாசுரன். தகவல் அறிந்த கிருஷ்ணர் வந்து வாணாசுரனை வென்றார்.
துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்த கிருஷ்ணர், புரூர சக்கரவர்த்தியின் விருப்பத்துக்காக இருவருக்கும் திருத்தங்கலில் திருமணம் செய்துவைத்து நின்ற நாராயண பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.
மலையாக மாறிய ஆலமரம்: ஒருசமயம் ஆலமரத்துக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். பிரம்மதேவர், “எப்போதும் ஆதிசேஷன் மீதுதான் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்”என்றார். வருத்தமடைந்த ஆலமரம், திருமாலை நோக்கி தவமிருந்தது. திருமால் காட்சி கொடுத்து, “யாது வரம் வேண்டும்?” என்று கேட்கிறார்.
ஆலமரமும். “தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீது பள்ளி கொண்டு அருள வேண்டும்” என்று தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறது. அதற்கு பெருமாள், “திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலையாக உருவம் எடுத்து வர வேண்டும். நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில் உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்” என்றார். மலை வடிவில் தங்கிய ஆலமரம், ‘தங்கும் ஆலமலை’எனப்பட்டது, காலப்போக்கில் ‘தங்கால மலை’என்று ஆனது.
கோயில் அமைப்பும் சிறப்பும்: திருத்தங்கல் கோயில் 2 நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மேல் நிலையில் மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுதை திருமேனி கொண்ட இவர் தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் ஆகிய திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். மூலஸ்தானத்தில் அருணன், மார்க்கண்டேயர், பிருகு உள்ளனர். அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இரண்டாவது நிலையில் கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்தநாயகி ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் செங்கமலத் தாயார் அருள்பாலிக்கிறார். தாயார் உயரமாகக் காட்சி அளிக்கிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும், பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக் காப்பும் சாத்தப்படுகிறது.
சூரியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையில் இருக்க, பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். தன் எதிரியான பாம்பை நண்பனாக ஏற்று தன் கையில் கருடாழ்வார் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே.
திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில் 5-ம் நாள் மங்களாசாசனம், கருட சேவை, 9-ம் நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். மேலும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவர் என்பது ஐதீகம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago