இஸ்லாம் வாழ்வியல்: அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்

By இக்வான் அமீர்

நபித்தோழர் உமர் ஜனாதிபதியாய் பொறுப்பேற்றிருந்த நேரம் அது. அவரது தோழர்களான அபூஉபைதா மற்றும் முஆத் பின் ஜபல் ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:

இறை நம்பிக்கையார்களின் தலைவருக்கு, அபூ உபைதா பின் ஜர்ராஹ் மற்றும் முஆத்பின் ஜபல் ஆகியோர் எழுதிக்கொள்வது. தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

ஜனாதிபதி அவர்களே, தாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகத் தங்கள் வாழ்வைச் சீர்த்திருத்திக்கொள்வதில் மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதோ தங்களின் தோள்களில் ஏராளமான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒழுக்கப் பயிற்சி அளித்து அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தங்களின் அவைக்கு, உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள். பாமரரும் வருவார்கள். கற்றோரும் வருவார்கள். கல்லாதோரும் வருவார்கள். நண்பர்களும் வருவார்கள். பகைவர்களும் வருவார்கள். ஆனால், எல்லோருக்கும் பாராபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கேற்ப எத்தகைய உயரிய நடத்தையை தாங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதை யோசித்துக்கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் ஆஜராக வேண்டிய அந்த மறுமை நாளை, அச்சத்தால் இதயங்கள் படபடக்கும் அந்த நாளைக் கண் முன் நினைத்திருங்கள். இறைவனின் திருமுன் யாரும் வாய்த் திறக்க முடியாத நாள் அது. இறைவனின் கருணையை எதிர்நோக்கியும், கிடைக்கவிருக்கும் தண்டனை குறித்தும் அச்சத்தாலும் உள்ளங்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நாள் அது! இந்த நாள் சதா தங்கள் கண்முன் இருக்கட்டும்!

கடைசியாக, “ஒரு காலம் வரும். அப்போது, மனிதர்கள் வெளித் தோற்றத்தில் நண்பராயும், உள்ளுக்குள் பகைவராயும் இருப்பார்கள்!” என்ற நபி மொழியை ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நலம் நாடும் கடிதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

தங்கள் மீது இறையருள் பொழிவதாக!

இப்படிக்கு,

அபூஉபைதா மற்றும் முஆத்பின் ஜபல்.

உமரின் பதில் கடிதம்

இந்தக் கடிதம் ஜனாதிபதி உமரின் கையில் கிடைத்ததும், அவர் மௌனத்தில் உறைந்துவிட்டார். நெடுநேரம் அப்படியே இருந்தார். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு இப்படி பதில் கடிதம் எழுதினார்:

“உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கண்டேன்.

அருமைத் தோழர்களே, நான் இதற்கு எப்படி பதில் அளிப்பது? உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும் வலிமையும் இல்லை! அப்படி ஏதாவது கிடைக்கும் என்றால் அது இறைவனின் புறத்திலிருந்துதான் எனக்குக் கிடைக்க வேண்டும்.

முன்னோர்களின் எச்சரிக்கையைப் போலவே, இறுதிநாள் குறித்து நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பொறுப்புகளை நீங்கள் செவ்வனே நிறைவேற்றிவிட்டீர்கள். இரவும், பகலும் மாறிமாறி வருவதன் மூலம் இந்த இறுதித் தீர்ப்பு நாளும் மிக வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தூரமானவற்றையெல்லாம் நெருக்கமானதாக்குகிறது. நவீனத்தையெல்லாம் கண நேரத்தில் பழமையாக்கிவிடுகிறது. முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, ஒவ்வொருவரும் சுவனம் செல்வர் அல்லது நரகம் புகுவர் என்பதை நானும் அறிவேன் தோழர்களே!

“ஒரு காலம் வரும். அப்போது மனிதர்கள் வெளித் தோற்றத்தில் நண்பராயும், உட்புறத்தில் பகைவராயும் இருப்பர்!” என்ற நபிகளாரின் முன்னறிவிப்பைச் சுட்டிக் காட்டினீர்கள். இது நிச்சயமாக உங்களைக் குறிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். அந்தக் காலம் வரும்போது, மக்கள் தங்கள் சுய ஆதாயங்களுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பொது நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நயவஞ்சகம் மக்களிடையே தோன்றும்.

இறுதியாக, என் அன்புக்குரிய தோழர்களே! நீங்கள் உண்மையாளர்கள். முற்றிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உங்கள் மடல் எழுதப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், அச்சமில்லாமல் தொடர்ந்து ஆட்சி, அதிகாரத்தை விமர்சித்தவாறே இருங்கள்.

உங்கள் இருவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக!

இப்படிக்கு,

உமர்பின் கத்தாப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்