நாளும் வைகுந்தன் நினைவு: தித்திக்கும் திருப்பாவை - 9

By செய்திப்பிரிவு

நாளும் வைகுந்தன் நினைவு

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரிய

தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று

நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

தூய மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும்

தீபங்கள் ஒளிவீச, நறுமணம் கமழும் படுக்கையில் உறங்கும்

மாமன் மகளே! மாணிக்க கதவை திறந்துவிடு!

மாமிமாரே! அவள் ஊமையோ?

அல்லது செவிடோ? சோம்பலுள்ளவளோ?

பெருந்துயில் கொள்ளும்படி மந்திரிக்கப்பட்டாளோ?

மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றெல்லாம் அவன்

நாமங்கள் பலவற்றை வாயாரச் சொல்லி வருகிறோம்,

உங்கள் மகளை எழுப்பமாட்டீர்களா?

(மாமன் மகளை எழுப்ப, கண்ணன் புகழைப் பாடுதல்)

இதையும் அறிவோம்: ஸ்ரீ மணவாள மாமுனிகள் என்ற ஆச்சாரியர் ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் மார்கழி நீராட்டு உற்சவத்தைச் சேவிக்க வந்தார். ஆனால் அதற்குள் உற்சவம் பூர்த்தியாகிவிட்டதை அறிந்து வருத்தமுற்றார். அவருடைய வருத்தத்தை போக்க எண்ணிய ஆண்டாள், அவருக்குத் தனியாக ஒரு நாள் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவத்தை நடத்த கோயில் அர்ச்சகருக்கு உத்தரவிட்டு, அதன்படி நடத்தி சேவிக்க செய்தாள். இன்றும் மார்கழி முடிந்து தை முதல் நாள் ‘மணவாள மாமுனி திருமஞ்சனம்’ என்ற இந்த வைபவம் நடைபெற்று வருகிறது!

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE