மல்லர்களை அழித்த மாமல்லன்: தித்திக்கும் திருப்பாவை - 8

By செய்திப்பிரிவு

மல்லர்களை அழித்த மாமல்லன்

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண், மிக்கு உள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு

மா-வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை: கிழக்கில் வானம் வெளுத்து எருமைகள் பனிப்புல் மேய எங்கும் பரவியிருக்கிறது. நோன்புக்கு செல்பவர்களையும், மற்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னையும் கூப்பிடுவதற்காக வாசலில் காத்திருக்கிறார்கள். குதூகலமுடைய பெண்ணே!

கண்ணனைப் பாட எழுந்திரு!

குதிரையாக வந்த கேசியின் பெரிய வாயை கிழித்தவன், மல்லர்களைக் கொன்ற தேவாதி தேவனான கண்ணனை சேவித்தால் நம் குறைகளை கேட்டறிந்து ஐயோ என்று அனுதாபப்பட்டு இரங்கி அருள் செய்வான்!

(கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி)

இதையும் அறிவோம்: ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஸ்ரீ ஆண்டாள் சூடிக் களைந்த மாலையும், அவளது திருமேனியில் சாத்திய பரிவட்டமும் பிரம்மோற்சவத்தின்போது திருமலை திருவேங்கடமுடையானுக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டாள் சாத்திக்கொண்ட மாலையுடன்தான் திருப்பதி பெருமாள் கருடசேவை சாதிக்கிறார். எதிர் மரியாதையாக திருவேங்கடமுடையான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்குப் புடவைகளை அனுப்பி வைக்கிறார். எந்த வசதியும் இல்லாத பல வருடங்களுக்கு முன் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை இமயமலை மேல் உள்ள பத்ரி நாராயணன் கோயிலுக்குக் குளிரில் சென்று அணிவித்திருக்கிறார்கள்!

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE