108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில், 96-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தலத்தை நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நம்மாழ்வார் பாசுரம்:
வைத்தமாநிதியாம் மது சூதன னையே அலற்றி
கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகு ஆள்வாரே”
» 108 வைணவ திவ்ய தேச உலா - 95 | திருக்குளந்தை வேங்கட வாணன் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 94 | தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள்
(3303) திருவாய்மொழி 6-7-11
மூலவர்: வைத்தமாநிதி பெருமாள் | உற்சவர்: நிஷோபவித்தன் | தாயார்: குமுதவல்லி நாயகி, கோளூர் வல்லி நாயகி | தீர்த்தம்: தாமிரபரணி, குபேர தீர்த்தம் | விமானம்: ஸ்ரீகர விமானம்
தல வரலாறு: செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து காட்சி கொடுத்தனர். அப்போது செய்த தவறு காரணமாக பார்வதிதேவியின் சாபத்துக்கு ஆளாகிறான் குபேரன். அவனது உருவம் விகாரம் ஆகவேண்டும், அவனது நவநிதிகள் அவனை விட்டுச் செல்லட்டும், அவனது ஒரு கண் பார்வை கெடட்டும் என்று சாபமிட்டார் பார்வதி தேவி.
தனது தவற்றை உணர்ந்து குபேரன் மன்னிப்பு கேட்டதால், மூன்று சாபங்களில் இரண்டு விலகின. நவநிதிகள் மட்டும் அவனை விட்டு விலகி திருமாலிடம் சென்றன. திருமாலை வணங்கி அவற்றைப் பெறுமாறு குபேரனுக்கு பார்வதி தேவி அறிவுறுத்தினார். அப்போது பார்வதி தேவி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
சுவர்த்தனனின் மகன் தர்மகுப்தனுக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இதன் காரணமாக வறுமையில் தவித்தான் தர்மகுப்தன். அப்போது நர்மதா நதிக்கரையில் பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர், “முன் ஜென்மத்தில் நீ பெரும் செல்வந்தனாக இருந்த போதும், செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அதனால் அது தேவையானவர்களுக்கு பயன்படாமல், தீயவர்கள் கைகளில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் தவித்து நீ உயிரிழந்தாய். இப்போது தாமிரபரணியின் தென்கரையில் உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகள் உள்ளன. அங்கு கோயில் கொண்டுள்ள வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால், உனது செல்வத்தைப் பெறலாம்” என்று கூறினார்.
தர்மகுப்தனும் திருக்கோளூர் வந்து பெருமாளை வழிபட்டு, செல்வத்தைப் பெற்றான். இந்தக் கதையை பார்வதி தேவி குபேரனிடம் கூறி, திருமாலிடம் வேண்டி தன் நிதியைப் பெற அறிவுறுத்தினார். இந்த நிதிகளை பெருமாள் பாதுகாத்து வைத்திருந்ததால் இத்தல திருமாலுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற பெயர் கிட்டியது.
பெருமாளே தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு, குபேரன் இழந்த நவநிதிகளில் பாதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் திருமகளிடம் கொடுத்தான்.
குபேரன் தான் இழந்த செல்வத்தை மாசி மாத சுக்ல பட்ச துவாதசியில் (அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி) பெற்றதால், இன்றும் அந்த நாளில் பக்தர்கள், குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.
அதர்மபிசுனம்: ஒரே நபரிடம் செல்வம் இருந்தால் அங்கு தர்மம் நிலைக்காது. அதர்மம் தலை தூக்கும். அதனால் செல்வம் ஒரே இடத்தில் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது திருமாலின் விருப்பம். அதனால் தர்மதேவன் இங்கேயே நிலையாகத் தங்கி, இத்தல பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.
இவ்வாறு அதர்மத்தை வென்று தர்மம் இங்கேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மம் இருந்தது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனத்துக்கு வந்தனர். இங்கும் அதர்மத்தை தர்மம் வென்றதால், இத்தலத்துக்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.
கோயில் அமைப்பும் சிறப்பும்: இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து சயனித்துள்ளார். கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என்று பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
மதுரகவியாழ்வார்: இங்கு வசித்த விஷ்ணு நேசர் என்பவரது மகனாகப் பிறந்தவர் மதுரகவியாழ்வார். இவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து, குருபக்தி ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை அறியலாம். 80 வயதான மதுரகவி, தமது வடதேச பயணத்தின்போது தனக்கு ஒரு குருநாதர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதன்படி தெற்கு நோக்கி பயணித்து, 16 வயது நிரம்பிய நம்மாழ்வாரை குருவாக ஏற்றார், தனது ஆச்சாரியரின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடினார் மதுரகவியாழ்வார். பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூட பாடவில்லை. குருவின் மூலமாகவே ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது.
பெண்பிள்ளை ரகசியம்: ஒருசமயம் ராமானுஜர் திருக்கோளூருக்குள் நுழையும்போது, ஒரு பெண்மணி தன் உடமைகளை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு புறப்படுகிறார். அவள் ஊரைவிட்டுச் செல்வதற்கான காரணத்தைக் கேட்கிறார் ராமானுஜர். அவள் அதற்கு 81 அர்த்தத்தைக் கூறி, இதைப் போல வாழ தனக்குத் தகுதி இல்லை என்று கூறுகிறாள். அந்த 81 அர்த்தங்கள் கேள்விகளாக, நம் வாழ்க்கையின் சாரமாக 81 ரகசியங்களாகப் போற்றப்படுகின்றன. அப் பெண்மணியை சமாதானப்படுத்தி, அவள் வீட்டுக்குச் சென்று அவள் கையாலேயே உணவு தயார் செய்யச் சொல்லி, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை சேவித்துவிட்டு உணவருந்துகிறார் ராமானுஜர்.
திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. செவ்வாய் தோஷத்துக்கு இங்கு பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago