உள்ளம் குளிர்விக்கும் ‘ஹரி’ நாமம்: தித்திக்கும் திருப்பாவை - 6

By செய்திப்பிரிவு

உள்ளம் குளிர்விக்கும் ‘ஹரி’ நாமம்

புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சு உண்டு

கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை

பறவைகள் ஆரவாரம் செய்கின்றன.

பட்சியரசன்‌ கருடனுக்கு தலைவனான திருமாலின் கோயிலின் பெரிய சங்கொலி கேட்கவில்லையா? இளம் பெண்ணே!

பூதனா என்னும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி,

வண்டு உருவில் கபடமாக வந்த சகடாசுரனை கட்டுக் குலையும்படி காலால் உதைத்து, பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் காரணமானவனை

முனிவர்களும் யோகிகளும் ‘ஹரி ஹரி ஹரி’ என்ற கோஷம்

எங்கள் உள்ளம் புகுந்து மனம் குளிர்கிறது! சட்டென்று எழுந்திரு.

(பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்)

இதையும் அறிவோம்:

கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தில் ‘சவுரி திருமஞ்சனம்’ காண ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்டார். ஆனால் தாமதமாகி விட்டது. ‘தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு நுழைந்தார். கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. விழா ஆரம்பிக்கவில்லை. விசாரிக்க, ஆண்டாளின் குஞ்சலத்தை காணவில்லை என்று எல்லோரும் பரபரப்பாக தேடிக் கொண்டு இருக்க, கீழே கிடந்த ஒரு குஞ்சலத்தை எடுத்து “இதுவா பாருங்கள்?” என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம், அதற்குப் பிறகுதான் உற்சவம் ஆரம்பித்தது. இன்றும் ஆண்டாள், கம்பர் சார்பாக ‘கம்பன் கொச்சு’ என்ற குஞ்சலத்தை அணிந்து கொள்கிறாள்.

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE