ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு   திருப்பாவை பட்டு  உடுத்தி எழுந்தருளிய ஆண்டாள்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பட்டு உடுத்தி ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் பிறந்த பெருமைக்குரிய தலமாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பானை நோன்பு இருந்து பகவான் கண்ணனை கரம் பிடித்தார் என்பது கோயில் வரலாறு. மார்கழி மாதத்தில் உள்ள 30 நாட்களுக்கு 30 திருப்பாவை பாசுரங்களை ஆண்டாள் பாடியுள்ளார். கோயிலில் மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் தங்கத்தேரில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 திருப்பாவை பாடல்கள் இடம்பெற்ற திருப்பாவை பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது. அதன்பின் வெள்ளிகிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்கழி மாதம் துவங்கும் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் மாலை 3:15 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.

இதில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆதிகேசவலு குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE