108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் கோயில் 91-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. நவ திருப்பதிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய தலமாகும். திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயிலை நம்மாழ்வார், மணவாள முனிகள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நம்மாழ்வார் பாசுரம்:
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
» 108 வைணவ திவ்ய தேச உலா - 90. நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 89 | திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்
நளிந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பனிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
(3571 – திருவாய்மொழி (9-2-4)
மூலவர்: ஸ்ரீவைகுண்ட நாதர் | உற்சவர்: கள்ளபிரான் | தாயார்: வைகுந்த நாயகி, சோரநாத நாயகி | தல விருட்சம்: பவளமல்லி | விமானம்: இந்திர விமானம்
தல வரலாறு: பிரம்மதேவர் வேத சாஸ்திரங்களை பாதுகாத்து வந்த நிலையில், அவரிடமிருந்து அவற்றை சோமுகன் என்ற அரசன், திருடிச் சென்றான். இதன் காரணமாக படைப்புத் தொழில் நின்று போனது. தனது வருத்தத்தை பிரம்மதேவர், திருமாலிடம் தெரிவிக்க வேண்டி, பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். பிரம்மதேவர் வேண்டியபடி அசுரனை அழித்து வேதங்களை மீட்டு அவரிடம் அளித்தார் திருமால். மேலும் பிரம்மதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, திருமால் இத்தலத்தில் வைகுண்டநாதராக எழுந்தருளினார்.
வைகுண்ட நாதருக்கு பால்பாண்டி என்ற பெயர் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் வழிபாடு இன்றி மறைந்து போனது. மேலும் சுவாமி விக்கிரகமும் ஆற்றங்கரையில் புதைந்திருந்தது. அதே சமயம் மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தினமும் ஓரிடத்தில் இருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்த பாண்டிய மன்னர், அவ்விடத்தை ஆராய்ந்து சுவாமி விக்கிரகம் இருந்ததை உணர்ந்து, கோயில் எழுப்பினார். தினமும் திருமஞ்சனத்துக்கு பால் அளித்தார் பாண்டிய மன்னர். இதன் காரணமாக பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயர் கிட்டியது.
நவதிருப்பதிகள்: நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் 9 வைணவத் தலங்களும் நவகிரகங்களுடன் தொடர்புடையன என்று கூறப்படுகிறது. இத்தலங்களில் உள்ள மூர்த்திகளே, நவகிரகங்களாகப் போற்றப்படுகின்றனர். சூரியன் (ஸ்ரீவைகுண்டம்), சந்திரன் (வரகுணமங்கை - நத்தம்), செவ்வாய் (திருக்கோளூர்), புதன் (திருப்புளியங்குடி), குரு (ஆழ்வார் திருநகரி), சுக்கிரன் (தென் திருப்பேரை), சனி (பெருங்குளம்), ராகு (இரட்டைத் திருப்பதி - தொலைவில்லி மங்கலம்), கேது (இரட்டைத் திருப்பதி).
நவகயிலாயம்: பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க வைகுண்டம் மற்றும் கயிலாயம் ஆகிய இரண்டு உலகங்களிலும் இடம் கேட்டு வழிபாடு செய்வதுண்டு. நவதிருப்பதி அமைந்துள்ள இவ்வூரில் நவகயிலாயம் தலமும் (கைலாச நாதர்) அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
மணித்துளி தரிசனம்: வைகுண்ட ஏகாதசி தினத்தில் உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்துக்குள் கொண்டு செல்வர். அப்போது சந்நிதி அடைக்கப்பட்டிருக்கும். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே நடை சாத்தப்படும். இந்த ஒரு சில மணித்துளிகளே இந்த வைபவம் நடைபெறும். இந்த தரிசனம் கண்டால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக ஐதீகம்.
கோயில் அமைப்பும் சிறப்பும்: ஸ்ரீவைகுண்ட நாதர் கோயில், 110 அடி உயரம், 9 நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்தைக் கொண்டுள்ளது. இந்திர விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் ஆதிசேஷன் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மார்பில் திருமகளுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் வைகுண்ட நாச்சியாருக்கும் உற்சவர் சோர நாச்சியாருக்கும் தனித்தனி சந்நிதிகள் உண்டு. பிரகாரத்தில் நரசிம்மர் சந்நிதி, கோதண்ட ராமர் சந்நிதிகள் உள்ளன.
கள்ளபிரான்: ஸ்ரீவைகுண்டம் நகரில், காலதூஷகன் என்பவன் திருட்டுத் தொழில் செய்து வந்தான். தினமும் தொழில் தொடங்குவதற்கு முன் வைகுண்ட நாதரை வழிபடுவது வழக்கம். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகக் செலுத்திவிட்டு, மீதியை தன் நண்பர்கள், ஏழை எளியோருக்கு தானம் செய்து வந்தான்.
ஒருசமயம் அரண்மனைக்கு தனது கூட்டாளிகளுடன் திருடச் சென்றபோது, அரண்மனைக் காவலாளிகளிடம் இவனது கூட்டாளிகள் மாட்டிக் கொண்டனர். இவன் மட்டும் தப்பி விட்டான். காலதூஷகனைப் பிடிக்க மன்னர், காவலாளிகளை அனுப்பினார்.
தன்னைக் காக்குமாறு வைகுண்ட நாதரிடம், காலதூஷகன் வேண்ட, பெருமாளும் காலதூஷகனுக்காக அவன் உருவில் அரண்மனை சென்றார்.
குடிமக்களை சரிவர காக்கத் தவறியதை மன்னனுக்கு சுட்டிக் காட்டி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும், பெருமாள் தனது சுய உருவத்தைக் காட்டி அருளினார். கள்வனாக வந்ததால் பெருமாளுக்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் பெயர்கள் கிட்டின.
திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து சிற்பங்கள் உள்ளன. சித்திரை, ஐப்பசி 6-ம் நாளில் சூரிய ஒளி வைகுண்ட நாதர் மீது விழுகிறது
திருவிழாக்கள்: வைகாசி மாத கருட சேவையில், ஒன்பது திருப்பதி உற்சவ மூர்த்திகளும் கருட வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். நம்மாழ்வாரின் உற்சவர் சிலை, அன்ன வாகனத்தில் ஒவ்வொரு திருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தலங்கள் குறித்து நம்மாழ்வார் பாடிய பாடல்கள் பாடப்படும். தை மாத தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை முதல் நாளில் உற்சவருக்கு 108 போர்வைகள் அணிவிக்கப்படும்.
ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு வழிபாடு செய்வதால் நன்மை கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago