108 வைணவ திவ்ய தேச உலா - 90. நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் (ஸ்ரீவரமங்கை, வானமாமலை) உள்ள வானமாமலை பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 90-வது திவ்ய தேசம் ஆகும்.

இக்கோயில் மூலஸ்தானத்தில் உள்ள தோத்தாத்ரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை, அர்த்தமண்டபத்தில் உள்ள கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகிய 11 பேரும் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இங்குள்ள சுயம்புமூர்த்தி பெருமாளை ஆண்டும் முழுவதும் தரிசிக்கலாம்.

இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை

வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே

தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கைதொழ உறை

வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

மூலவர்: தெய்வநாதன், வானமாமலை (தோத்தாத்ரிநாதர்)

தாயார்: வரமங்கை,

தலவிருட்சம்: மாமரம்.

தீர்த்தம்: சேற்றுத் தாமரை

ஒரு சமயத்தில் மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார். அவ்வாறு அழித்த சமயத்தில் அரக்கர்களின் துர்நாற்றம் பூமி முழுவதும் வீசியது. பூமாதேவி தனது தூய்மையை இழந்து விட்டதாக வருந்தினாள். எனவே இத்தலத்தில் தவமிருக்கத் தொடங்கினாள். அதன்காரணமாக விஷ்ணுவின் அருள்பெற்றாள். திருமாலும் வைகுண்டத்தில் வீற்றிருப்பது போல இத்தலத்துக்கு வந்து வைகுண்ட விமானத்தில் ஆனந்த மயமாக அவளுக்கு (பூமி பிராட்டி) காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பெற்றுள்ளது. அதனாலேயே நாங்குநேரி ஆனது. ஸ்ரீதேவி, பூமி பிராட்டியுடன் ராஜ தர்பார் கோலத்தில் ஓர் அரசர் போல விற்றிருக்கிறார் பெருமாள். இது இத்தலத்துக்கு உண்டான சிறப்பு ஆகும். பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும் மற்றொரு கையை தன் மடிமீது வைத்துள்ளபடியும் அமர்ந்திருக்கிறார். இதற்கு “யார் தன் பாதத்தில் சரண் புகுகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு” என்பதாக அர்த்தம் கூறுவர். பெருமாள் கையில் உள்ள பிரத்யேக சக்கரத்தைப் பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள தாயாரின் உற்சவ சிலை முதலில் திருப்பதியில் இருந்தது. அங்குள்ளவர்கள் வேங்கடவனுக்கு ஸ்ரீவரமங்கையை திருமணம் செய்ய இருந்தனர். அப்போது பெத்த ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, “இவள் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாளுக்காக இருப்பவள்” என்று கூறியதால் இத்தலத்துக்கு வந்துவிட்டாள்,

அசுர குலத்தைச் சேர்ந்த பெண் மகிஷ்மதி, தன் இரண்டு மகன்களை யாரும் வீழ்த்தி விடக் கூடாது என்று பிரம்மதேவனிடம் இருந்து வரம் பெற்றிருந்தாள். பெற்ற வரம் காரணமாக அனைத்து தேவர்களையும் இந்த இரு அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். நாளுக்கு நாள் அவர்களது அக்கிரமங்கள் அதிகரிக்க, பிரம்மதேவன் திலோத்தமையை அழைத்து, இரு அசுரர்கள் முன்னர் நடனமாடும்படி கூறினார். திலோத்தமையும் அவ்வண்ணம் இரு அசுரர்கள் முன்னர் நடனமாடினாள். அப்போது இரு அசுரர்களும், திலோத்தமையை, தானே அடைய வேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டனர்.

திலோத்தமையின் நுண்ணிய அறிவினால், இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டு மாண்டனர். இதனால் மகிழ்ந்த பிரம்மதேவன், அவள் வேண்டும் வரம் அளிக்க திலோத்தமைக்கு உறுதி அளித்தார்.

திலோத்தமை, தனக்கு எப்போதும் ஸ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்யும் வரம் வேண்டும் என்றாள். பிரம்மதேவனும், தான் வரமளித்தாலும், திருமாலைக் குறித்து தவம் இருந்தால் அவள் எண்ணம் ஈடேறும் என்றார். அதன்படி திலோத்தமை, ஊர்வசியை அழைத்துக் கொண்டு திருமாலை நோக்கி தவம் இருந்தாள். இருவரின் தவத்தை மெச்சி அப்படியே ஆகட்டும் என்று நாராயணன் அருள்பாலித்தார், அதன்படியே இருவரும் திருமாலுக்கு வெண்சாமரம் வீசும் பணியை செய்து வருகின்றனர்.

பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மதேவன், இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள ராஜகோபுரம் மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. கோயிலின் உட்புறத்தில் பந்தல் மண்டபம், பெரிய மண்டபம் உள்ளன. அங்கு தங்கரதம், தங்க சப்பரம் இருப்பதைக் காணலாம். பங்குனி உத்திரத் திருநாளில் தங்கத்தேர் இழுக்கப்படும். திருவிழாக் காலங்களில் செவ்வந்தி மண்டபத்துக்கு உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்.

கருவறையில் தோத்தாத்ரி நாதர் பிராட்டியார் இருவருடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆதிசேஷன் தங்கக் குடை பிடிக்கிறார். கருவறையை சுற்றி வந்தால் 32 ரிஷி, முனிவர்கள், தும்பிக்கை ஆழ்வார் அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.

வீரப்ப நாயக்கர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. இக்கலைக் கூடத்தைக் கடந்தால் லட்சுமி வராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள் அனைவருக்கும் உள்ள தனிசந்நிதிகளை தரிசிக்கலாம். குலசேகரன் மண்டபத்தில் பதினோரு ஆழ்வார்களை தரிசிக்கலாம். நம்மாழ்வார் சடாரியாக உற்சவரின் முன் உள்ளார். குலசேகரன் மண்டபத்தில் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிவர், உடையவர் சந்நிதிகள் உள்ளன. மேலும் ராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் தனித்தனியே உள்ளன.

இத்தலத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள்.

சரும நோய் உள்ளவர்கள் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து, சில துளிகள் உட்கொண்டால் அனைத்து உபாதைகளும் சரியாகிவிடும். அனைத்தும் குணமானதும், பக்தர்கள் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகம் செய்வது வழக்கம்.

அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்