தித்திக்கும் திருப்பாவை - 1

By செய்திப்பிரிவு

நாராயணனே நமக்கே பறை தருவான்!

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை

மார்கழி மாதம் பவுர்ணமியுடன் கூடிய நன்னாள் இது

பாவை நோன்புக்கு நீராட விரும்புகிறவர்களே!

ஆபரணங்களை அணிந்தவர்களே!

சிறப்பு மிக்க திருவாய்ப்பாடி இளம் பெண்களே வாருங்கள்!

கூர்மையான வேலை ஏந்தி கண்ணனுக்குத் தீங்கு வராமல் கடுமையான காவல் தொழிலைப் புரியும் நந்தகோபனின் குமாரன்,

அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி,

சிவந்த கண்களும் சூரிய சந்திர முகமுடைய கார்முகில் வண்ணனான நாராயணனே நாம் விரும்பியதை கொடுப்பவன்.

உலகம் புகழப் பாவை நோன்பில் ஊன்றி ஈடுபடலாம் வாருங்கள்!

(நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியரை விடியற்காலை நீராட அழைத்தல்.)

இதையும் அறிவோம்

‘ஆண்டாள்’ என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாக சொல்லி வருகிறோம். ஆண்டாள் எங்கும் தன்னை ‘ஆண்டாள்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. கோதை என்று தான் சொல்லிக் கொள்கிறாள்! பெரியாழ்வார் சூட்டிய அழகியதமிழ் பெயர் கோதை. கோதை என்றால் ‘மாலை’. சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘கோதா’. ‘கோதா’ என்றால் ‘நல்வாக்கு அருள்பவள்’. பூமாலையைச் சூடிக் கொடுத்தாள்; பாமாலையைப் பாடிக் கொடுத்தாள். இரண்டு தன்மைக்கும் ஏற்றபடி அவள் பெயர் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

- சுஜாதா தேசிகன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE