108 வைணவ திவ்ய தேச உலா - 87 | திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 

By செய்திப்பிரிவு

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 87-வது திவ்யதேசம் ஆகும். இத்தலத்தில் திருமாலின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது.

இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பு அறுப்பான்

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை

பாட்டாய பலபாடி பழவினைகள் பற்று அறுத்து

நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.

மூலவர்: ஆதிகேசவ பெருமாள் | தாயார்: மரகதவல்லி நாச்சியார் | தீர்த்தம்: கடல் வாய் தீர்த்தம், வட்டாறு, ராம தீர்த்தம்

தல வரலாறு: ஒரு முறை நான்முகன் யாகம் செய்தபோது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து அரக்கர்கள் தோன்றினர். கேசன், கேசி என்னும் பெயர் கொண்ட இவர்கள் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவித இன்னல்கள் கொடுத்து வந்தனர். தங்கள் பாதிப்புகள் குறித்து திருமாலிடம் தேவர்கள் முறையிட்டனர்.

திருமால் கேசனை அழித்தார். கேசியின் மேல் சயனம் கொண்டார். திருமாலை பழிவாங்கும் நோக்கத்தோடு கங்கையையும் தாமிரபரணியையும் கேசியின் மனைவி, துணைக்கு அழைக்க, அவர்களும் அவளுக்கு உதவ முன்வந்தனர். இத்தகவலை அறிந்த பூதேவி, திருமால் சயனம் கொண்டிருந்த பகுதியை மேடாக்கினாள். திடீரென்று மேடான பகுதி நடுவில் ஏற்பட்டதால், தாமிரபரணியும் கங்கையும் திருமால் இருந்த இடத்தைச் சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓடத் தொடங்கின. இதனால் இத்தலம் வட்டாறு என்று அழைக்கப்பட்டது. கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

கேசியின் மீது சயனித்தபோது அவன் தனது 12 கைகளால் தப்பிக்க முயற்சி செய்தான். உடனே கேசவப் பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து அவனை தப்பிக்க விடாமல் செய்தார். இவையே இப்பகுதியைச் சுற்றி சிவன் கோயில்களாக அமைந்தன.

மகாசிவராத்திரியின்போது பக்தர்கள் 12 சிவன் கோயில்களையும் ஓடியவாறு தரிசித்து நிறைவாக ஆதிகேசவ பெருமாளையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது.

இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டுள்ளதால், கோயிலுக்குள் ஆடவர்கள் சட்டையணிந்தபடி அனுமதிக்கப்படுவதில்லை. இத்தல பெருமாள் 22 அடி நீளம் கொண்டவராக உள்ளார். கருவறையில் மூன்று நிலை வாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்னும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழைவாயிலிலும் காணலாம்.

திருமுகவாயிலில் இருந்து பார்த்தால் அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமுகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேஷன், கருடாழ்வாரைக் காணலாம். இவரின் நாபியில் தாமரையோ நான்முகனோ கிடையாது. சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.

திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையைக் காணலாம். தரையில் தாயாருடன் உள்ள உற்சவரைக் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களைக் காணலாம்.

மேற்கு பார்த்த நிலையில் இருக்கும் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலை வைத்து, வடக்கே திருவடி காண்பித்து சயனத்தில் உள்ளார் பெருமாள். தாயார் மரகத வல்லி நாச்சியார்.

கருவறைக்கு முன் உள்ள ஒற்றைக் கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லால் எழுப்பப்பட்டது. இதன் சுவர்கள் மட்டும் 3 அடி தடிமம் கொண்ட பாறையாகும். ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதன் – ரதி தம்பதி, லட்சுமணர், இந்திரஜித் போன்றவர்களின் சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரகாரத்து தூண்களில் காணும் தீபலஷ்மிகளின் சிலா ரூபங்களில், முகச்சாயலும், சிகை அலங்காரங்களும் ஒன்றைப் போல் ஒன்றில்லாது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாயலில், வித்யாசமான சிகையலங்காரங்களுடன் இருக்கும்.

இவற்றில் குழல் ஊதும் கண்ணன் இசையில் மயங்கிய விலங்குக் குட்டிகளின் சிலை சிறப்பாக கூறப்படும். அக்குட்டிகள் தாய்மாறிப் பால் குடிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும். அரசர்களின் ஆட்சிக்காலம் குறித்து கல்வெட்டுகள் உரைக்கின்றன.

திருவிதாங்கூர் மகாராஜாக்கள் திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோயில் கட்டுவதற்கு முன் திருவட்டார் ஆதிகேசவருக்குதான் அடிமையாக இருந்து தொண்டு புரிந்தார்கள். இவர் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமிக்கும் மூத்தவர். நம்மாழ்வார் பதினோரு பாடல்கள் பாடி மங்களாசாசனம் செய்த சேரநாட்டு திவ்ய தேசம். கிபி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் இக்கோயிலுக்கு மங்களாசனம் பாடி "வாட்டாற்று கேசவன்" என்றழைப்பதன் மூலம் குறைந்த பட்சம் 1,200 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில் என்பது தெளிவாகிறது.

புரட்டாசி, பங்குனி மாதங்களில் ஆறு நாட்கள் சூரியக்கதிர்கள் மூலவர் மீது படுவது கூடுதல் சிறப்பு.


திருவிழாக்கள்:
ஓணம், புரட்டாசி சனிக்கிழமை, ஐப்பசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பான பூஜைகள், திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு நடைபெறும். வேண்டுவதை வேண்டிய வண்ணம் அளிக்கும் பெருமாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இத்தலத்தில் காணப்படும்.

இத்தல பெருமாளை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.

அமைவிடம்: திருவட்டாறு பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது இத்தலம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE