108 வைணவ திவ்ய தேச உலா - 85 | திருவண் வண்டூர் பாம்பணையப்பன் கோயில்

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் திருவண் வண்டூர் மகாவிஷ்ணு கோயில், 85-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

திருவமுண்டூர் என்றும் திருவண் வண்டூர் என்றும் அழைக்கப்படும் இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்

விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண் வண்டூர்

கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு

உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே. (3230) (திருவாய்மொழி 6-1-4)

மூலவர் : பாம்பணையப்பன் (கமலநாதன்) | தாயார் : கமலவல்லி நாச்சியார் | தீர்த்தம் : பம்பை தீர்த்தம் | விமானம் : வேதாலய விமானம்

தல வரலாறு

பிரம்மதேவருக்கும் நாரத முனிவருக்கும் இடையே ஒருசமயம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மதேவர், நாரத முனிவரை சபித்துவிடுகிறார். கலக்கமடைந்த நாரதர், இத்தலத்துக்கு வந்து திருமாலை நோக்கி தவம் புரிந்தார். அனைத்து படைப்புகளைப் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்று திருமாலிடம் வேண்டுகிறார்.

பெருமாளும் நாரத மகரிஷி வேண்டிய வரத்தை அளிக்கிறார். திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, பெருமாளே அனைத்தும் என்றும், அவரை வழிபடும் முறை, துதிப்பாடல்கள் குறித்தும் நாலாயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ என்ற நூலை, நாரத மகரிஷி இத்தலத்தில், அருளிச் செய்துள்ளார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. வேதாலய (சகல வேத விமானம்) விமானத்தின் கீழ் உள்ள வட்ட வடிவ கருவறையில் மூலவர் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இவ்வூரில் பூமியை தோண்டும்போது, புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை இக்கோயிலுக்கு கொண்டு வந்து புதிய சந்நிதிகள் மற்றும் மண்டபங்கள் கட்டப்பட்டன.

கோயிலின் மேற்குப் புற வாயிலில் நுழையும்போது, காளிங்கன் மேல் கண்ணன் நர்த்தனம் ஆடுவது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. இந்தக் கண்ணனை இரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றன.

தூண்களின் இருபுறமும் தசாவதாரக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

பஞ்ச பாண்டவர்கள் வன வாசத்தின்போது கேரள தேசத்துக்கு வருகை புரிந்தனர். அப்போது, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்ததாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார்.

திருவிழா

மாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடைபெற்று, பத்து நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் தலமாக இத்தலம் போற்றப்படுவதால், பக்தர்கள், இங்கு பெருமாளுக்கு பால் பாயாசம் நைவேத்தியமாகப் படைத்து வழிபாடு செய்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE