ஸ்ரீபெரும்புதூர் வனபோஜன உற்சவம்: டிசம்பர் 15
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் என பாவை பாடினாள் பாடவல்ல நாச்சியார் ஆண்டாள். தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வந்த கண்ணன் செய்த மாயங்களை கேட்டு தன் மணாளனாய் வரித்தவள், விட்டுசித்தன் கண்டெடுத்த கோதை. குன்றம் ஏந்தி குளிர் மழை காத்த கோபாலனை கோவிந்தா எனத் திருப்பாவையில் மூன்று பாசுரங்களில் அழைத்தவள் ஆண்டாள்.
அன்று கோகுலத்தில் கண்ணன் ஆவினங்களை மேய்த்து வர முற்பட்டு, தன் நண்பர்களோடு சேர்ந்து நண்பகல் உணவருந்தி, கூடியிருந்து குளிர்ந்தான்.
அவ்வாறு கண்ணன், காடுகள் ஊடு போய் கன்றுகள் மேய்த்து களித்துண்ட கார்காலத்தை நினைவுகொள்ளும் விதத்திலே, திருக்கோயில்களில் கார்த்திகை மாதத்திலே வன போஜன உற்சவமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
குறிப்பாக ஆழ்வார்கள் நால்வரும் ஆசார்யர்கள் பலரும் அவதரித்த தொண்டை நாட்டிலே, அவர்களின் திருநட்சத்திரத்தையொட்டி, கார்த்திகை மாதத்திலே இந்த வன போஜன உற்சவமானது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தை மாதம் மக நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். அதன்படி கார்த்திகை மக நட்சத்திரத்தில், திருமழிசையில், ஜகன்நாத பெருமாளுடன் வன போஜன உற்சவத்தைக் கொண்டாடுகிறார் பக்திசாரன்.
அதைப்போல அகவை ஆயிரம் காணும் ஆதிசேடன் அம்சமாய் அவதரித்த ராமானுஜரின் திருத்தம்பியான எம்பாருக்கும், தண்டும், பவித்திரமாய் விளங்கிய முதலியாண்டானுக்கும், கூரத்தாழ்வானுக்கும் , அவர்கள் அவதரித்த நட்சத்திரங்களில், அவதாரத் திருத்தலங்களில் வனபோஜன உற்சவம் நடத்தப்படுகிறது.
கார்த்திகை மாத புனர்பூச நட்சத்திரத்தில் ராமானுஜரின் நிழலாய் விளங்கிய எம்பார் அவதரித்த மதுர மங்கலத்திலும், ராமானுஜரின் மருமகனான தாசரதி என்னும் முதலியாண்டான் அவதரித்த புருஷ மங்கலம் என்னும் நஸரத்பேட்டையில் வன போஜன உற்சவம் நடைபெறுகிறது.
மேலும் எம்பெருமானார் தரிசனத்திற்காகத் தன் தரிசனத்தை (கண்களை) இழந்த கூரத்தாழ்வான் அவதரித்த ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, இந்த வருடம் கூரத்திலே, கார்த்திகை மாதத்திலே, மிக விசேஷமாக , கூரத்தாழ்வானை வன போஜன மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள்.
இவ்வாறு ஆழ்வார்களும் தொண்டர்களும் அவதரித்த ஸ்தலங்களிலே உறையும் ஆராதனை தெய்வங்களைக் கண்ணனாகவே எண்ணி, மிகுந்த பிரசாதங்களை அமுது செய்வித்து, அடியார்களுடன் கூடியிருந்து குளிர்ந்து, பகிர்ந்து உண்பதை வனபோஜன உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள்.
இது ஆழ்வார்கள் மொழிந்த திருமொழியைக் கொண்டு அவனது அடியவர்கள், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுக்கு நடத்தும் இந்திர விழாவாகும். தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னுடய திருமாலையிலே, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்கிறார் தம் பாசுரமொன்றில்.
பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதங்களை, அவன் திருமுன்பாக ஏற்ற ஆழ்வார், ஆசார்ய பெருமக்கள் உண்ட மிகுதியை நாம் பெற்று , புசிப்பது புனிதமானது என்கிறார் மண்டங்குடியில் அவதரித்த மாமறையோன் தொண்டை அடிப்பொடி ஆழ்வார். இதைத்தானே ராமானுஜர் தம் வாழ்நாளில் நடத்திக் காட்ட முனைந்தார்.
போனகம் செய்த சேடகமாய்
அன்று காஞ்சியிலே வாழ்ந்த காலத்தில், தன் மானசீக குருவாக ஏற்ற திருக்கச்சி நம்பிகளைத் தம் இல்லத்துக்கு அழைத்து விருந்துண்ணச் செய்து, அவர் உண்ட சேடத்தை மிகுதியை தாம் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த காரியம் முடியாமல் போனது. ஆனாலும் திருவரங்கம் திருக்கோயிலில், இன்றளவும், திருக்கச்சி நம்பிகள் அமுது செய்த பிரசாதத்தையே, உடையவருக்கும் `போனகம் செய்த சேடக’மாய் பின்னர் கண்டருளச் செய்கின்றனர்.
அந்தத் திருக்கச்சி நம்பிகள் அவதரித்த பூந்தமல்லியில், கார்த்திகை மாத மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் வரதராஜனுடன் வனபோஜன உற்சவம் நடத்தப் பெறுகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கார்த்திகை திருவாதிரையில், ஸ்ரீபெரும்பூதூரில் ராமானுஜருக்கு நடத்தப்பெறும் வனபோஜன உற்சவம், மிகச் சிறப்பானது.
சித்திரை திருவாதிரையின் முன்னோட்டம்
தன் ஆராதனை தெய்வமான ஆதிகேசவப் பெருமாளுடன், இளையாழ்வார் புறப்பட்டு, திருக்கோயிலின் தென்புறத்தே இருக்கும் வனபோஜன மண்டபத்தை அடைந்து, மாலை வரை திருமஞ்சனம், அலங்காரம் எனப் பல வைபவங்களில் திளைத்துப் பின்னர் இரவு திருக்கோயிலை அடைவார். காலை வேலையில் வனபோஜன மண்டபத்திற்கு எழுந்தருளும் புறப்பாடு அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய கண்கொள்ளாக்காட்சி.
வாத்தியங்கள், பேரிகைகள் முழங்க, செண்டை மேளம் இசைய நடக்கும் ராமானுஜரின் நடையழகு தரிசிக்க ஆனந்தம். அந்தக் கண்ணன் கேசவனுடன் இணைந்து, இலக்குமண முனி ராமானுஜன், தன் பரிவாரங்ளோடு விருந்தோம்பல் காண வீறுநடை போட்டுச் செல்லும் வியத்தகு விழாவே வன போஜன உற்சவம்.
அத்தகைய விசேஷத் திருநாள், இன்று ஸ்ரீபெரும்பூதூரில் நடைபெறுகிறது. சித்திரை திருவாதிரையின் முன்னோட்டமாக இன்றைய தினத்தில் நடக்கும் இந்திர விழாவான வனபோஜன உற்சவத்தில் ராமானுஜரையும், கண்ணன் கேசவனையும் கண்டு வணங்கி, ஆண்டாள் உரைத்தபடி கூடியிருந்து குளிர்வோம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago