108 வைணவ திவ்ய தேசங்களில், ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன் கோயில், 72-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. ஆய்ப்பாடி, கோகுலம் என்று அழைக்கப்படும் இத்தலம் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் பாசுரம்:
தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார்
கற்றா நிரைப் பின் போவர்
நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை
நேர்ப்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
கண்டார் கழறத் திரியும்
ஆயா, உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே.
டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் : நவமோகன கிருஷ்ணன் | தாயார் : ருக்மணி, சத்திய பாமா | விமானம் : ஹேமகூட விமானம் |
தல வரலாறு: பாகவதம் உள்ளிட்ட வடமொழி நூல்கள், ஆயர்பாடி பற்றியும் நவமோகன கிருஷ்ணனைப் பற்றியும் கூறியுள்ளன. துவாபர யுகத்தில் திருமால் கண்ணனாக அவதரித்தார். அவரது குழந்தைப் பருவம் கோகுலத்தில் கழிந்தது. கண்ணன் சிறு பாலகனாக இருந்தபோது செய்த குறும்புகள், ஒவ்வொரு வீடாகச் சென்று வெண்ணெய் உண்டது, மாடு மேய்த்தது, பூதகியைக் கொன்றது, கம்ச வதம் செய்தது ஆகியவற்றைப் பற்றி எண்ணற்ற பாசுரங்களில் ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர்.
கோயில் அமைப்பும் சிறப்பும்: ஹேமகூட விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நவமோகன கிருஷ்ணன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தருகே யமுனை நதி ஓடுகிறது. கோகுல் என்ற இடத்தில் இருந்து, 1 கிமீ தொலைவில் உள்ள இடம்தான் கோகுலப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் உள்ள தலத்தில் நந்தகோபர், யசோதை, பலராமர், தொட்டில் கிருஷ்ணருக்கு மரத்தால் ஆன மூர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
நந்தோற்சவம்: சிறையில் தேவகி மைந்தனாகப் பிறந்து, ஆயர்பாடி நந்தகோபர் வீட்டுக்கு கண்ணன் வந்த நாள், ஆண்டுதோறும் நந்தோற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி தினத்தின் மறுநாள் வடநாட்டிலும் பிற இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. சென்னை கௌடியா மடத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
பிருந்தாவனம்: உத்தரப் பிரதேசம், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் பிருந்தாவனம். கண்ணனின் இளமைக் கால வாழ்க்கையோடு தொடர்புடைய இடம் விரஜ பூமி என்று அழைக்கப்படுகிறது. விரஜபூமியானது பெரும்பகுதி உத்தரப்பிரதேசத்திலும் சில பகுதிகள் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவிலும் அமைந்துள்ளது. ராதை மற்றும் கிருஷ்ணர் வழிபாட்டுக்காக எண்ணற்ற கோயில்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ பழக்க வழக்கங்கள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.
துளசிச் செடிகள் நிறைந்த காடாக பிருந்தாவனம் இருந்துள்ளது. (பிருந்தா என்றால் துளசி, வனம் என்றால் காடு). நிதிவனம் மற்றும் சேவாகஞ்ச் பகுதிகளில் துளசிச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளாக கோகுல் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்ந்தனம் ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்த இடமே விரஜபூமி அல்லது கிருஷ்ண ஜென்மபூமி என்று அழைக்கப்படுகிறது.
மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயில் ஜென்மபூமி என்று அழைக்கப்படுகிறது. யமுனை நதியும் புனித நதியாக வணங்கப்படுகிறது.
மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுதவனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம் ஆகிய 12 காடுகள் பிருந்தாவனத்தில் உள்ளன. இவற்றுள் 7 வனங்கள் யமுனையில் மேற்குக் கரையிலும், 5 வனங்கள் கிழக்குக் கரையிலும் உள்ளன.
ஆண்டாள் யமுனை நதியை ‘தூய பெருநீர் யமுனை’ என்றும், கண்ணன் வளர்ந்த இடத்தை ‘சீர்மல்கும் ஆயப்பாடி’ என்றும் பாடியுள்ளார்,
இங்கு தினமும் ஆட்டமும் பாட்டும் இருக்கும் என்பதை
‘உறியை முற்றத் துருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தலவிழத் திளைத்து எங்கும்
அறிவிழிந்தன ராயப்பாடி யாயரே’ என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
கேசீவாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர் ஆகிய இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.
கிபி 16-ம் நூற்றாண்டு வரை காடுகளுக்கிடையே பிருந்தாவனம் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. சில காலம் கழித்து சைதன்யர் என்பவர், கிருஷ்ணர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களைக் காண வேண்டும் என்ற விருப்பத்தில் வந்தபோது, பிருந்தாவனத்தைக் கண்டறிந்தார். இக்காடுகளில் மயில்கள், கால்நடைகள், குரங்குகள், பல்வேறு பறவை இனங்கள் காணப்படுகின்றன.
கிருஷ்ணர் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் ஆகியவை விரஜபூமியில் உள்ளன. 285 கிமீ சுற்றளவு கொண்ட விரஜபூமியை வலம் வருவது ‘விரஜ் பரிக்ரமா’ என்று அழைக்கப்படுகிறது. இதை முழுவதுமாக வலம் வர இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள் ‘பரிக்ரமா’வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.
திருவிழாக்கள்: நாள்தோறும் திருவிழா போலவே ஆட்டம் பாட்டம், கூத்து, கொண்டாட்டம் என்று ஆயர்ப்பாடி குதூகலமாக இருக்கும். ஆயர்பாடியை சேவித்தவர்களுக்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago