குரு பூர்ணிமா எப்படி வந்தது?

By கார்த்திக் ஜெயராமன்

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.

சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள். குடீசகர்கள் என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; பஹுதகர்கள் என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; பரிவ்ராஜகர்கள் என்று அழைக்கப்படும் மற்றும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்துகொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள்தான் தங்குவார்கள்.

பரிவ்ராஜகர்கள் ஞானத்தை அடைந்திருப்பார்கள்; குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருப்பார்கள். தாங்கள் தங்கும் கிராமத்திலோ நகரத்திலோ பிச்சை எடுத்துதான் உணவு உட்கொள்வார்கள். சன்னியாசிகளுக்குப் பற்றின்மை எனும் பண்பு மிகவும் முக்கியமானது.

ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ, மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் மழைக் காலத்திலோ ஊர் ஊராக சஞ்சரிக்க முடியாது. ஏனெனில் மழைக் காலத்தில் புதிதாகப் புட்கள், செடிகள் துளிர் விடும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளிவரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை என்ற பண்பும் மிகவும் முக்கியமானது.

புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் சஞ்சரிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி முடியும் வரை (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள். குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும்.

அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும்பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன்வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆங்கில தேதி ஜூலை 12 குருப் பூர்ணிமா அனுசரிக்கப்பட்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்