ஆன்மிக சுற்றுலா: ராதே கிருஷ்ணகி ஜெய் - பாங்கே பீஹாரிஜி ஆலயம்

By பிருந்தா கணேசன்

பிருந்தாவனில் மிக முக்கியமானதும் பிரசித்தமானதுமான கோவில் பாங்கே பீஹாரிஜியின் கோவில். இது மதன் மோகன் கோவிலுக்கு 200 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. பிருந்தாவனில் நிறைய கோவில்கள் சற்றே வித்தியாசமானவை. நெரிசலான தெருக்களின் நடுவே மாளிகைபோல் இருக்கும். கட்டிடக் கலை முதல் எல்லாவற்றிலும் ராஜஸ்தானின் பாதிப்பைக் காணலாம்.

நம் உடைமைகளை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கோவிலுக்குள் இரண்டு பக்கமாக நுழைய முடியும். நான்கு வளைவுகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உள் நுழைவாயில். எதிரே உள்ளேயே கருவறை. உட்புறம் முழுவதும் மலர் வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்காரங்கள். அருகே செல்வதற்குப் படிகள். எட்டிப் பார்ப்பதற்குள் நடை சாத்தப்படுகிறது. 25 நிமிடம் கழித்துத் திறக்கப்படுகிறது.

அரை மணிநேரமோ அல்லது ஒரு மணி நேரமோதான் காட்சி தருவார் தாகுர்ஜி (பிஹார்ஜி). ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பது மணி நேரம்தான் தரிசனம் தருவார். நடை திறந்தவுடன் அருமையான காட்சி. ராதே கிருஷ்ணகி ஜெய் என்று கை கூப்பிய வண்ணம் பக்தர்கள் கோஷம். வேங்குழலுடன் கரிய நிறத்தில் அலங்காரத்துடன் பீஹாரிஜி. அருகில் ராதாபாய்.

வசீகரக் கண்ணழகன்

பிஹாரி என்றால் ஒப்புயர்வற்ற களியன் (supreme enjoyer). சிலைக்கு மூன்று இடத்தில் வளைவுகள். அதனால் பாங்கே (வளைவு). இறைவன் த்ரிபங்க (tribhanga) கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒடிசி நடனத்தில் ஒரு முக்கியமான நிலை. கண்களின் கவர்ச்சி காந்தம்போல் இழுக்கிறது. நெடு நேரம் இந்தச் சிலையின் கண்களை உற்று நோக்கினால் பார்ப்பவர்கள் நினைவிழப்பார்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர் இங்கே குழந்தையைப் போல் பராமரிக்கப்படுகிறார். சேவைகளும் குழந்தைக்கு ஏற்றாற்போல் அளிக்கப்படுகின்றன. காலை ஒன்பது மணிக்குத்தான் கோவில் திறக்கும். பால கோபாலனைத் தொந்தரவு செய்யும் என்பதால் மணியோ அல்லது வேறு வாத்தியமோ இசைக்கப்படுவதில்லை. தலைக்கு மேல் பெரிய சாமரம் வீசப்படுகிறது. மங்கள ஆரத்தி வருடத்திற்கு ஒரு முறைதான். அதுவும் ஜென்மாஷ்டமி அன்று மட்டும்தான்.

மணியோசைக்குப் பதில் ராதா நாமம்

ஹோலி, கிருஷ்ணாஷ்டமி தவிர இங்கே கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா ஊஞ்சல் உற்சவம். இது ஜூலன் யாத்ரா என்றழைக்கப்படுகிறது. அந்த வைபவத்தில் முக்கிய நாளன்று பீஹாரிஜி ஒரு தங்க ஊஞ்சல் மீது வைத்து ஆட்டப் பெறுவார். வெள்ளியில் செய்யப்பட்ட பல விதமான குட்டிக் குட்டி ஊஞ்சல்களும் உண்டு. அவருடைய தீட்சண்யம் தாங்க முடியாது என்பதால் அவ்வப்போது திரையிடப்படுகிறது என்கிறார் தலைமை பூஜாரி. மணியோசைக்கு பதிலாக ராதா நாமம்தான் ஒலிக்கிறது. அந்தப் பெயர்தான் அவருக்கும் மிகவும் பிரியமானதாம். அனந்தனின் தாமரைப் பாதங்களை அட்சய திருதியை என்று மட்டும்தான் காண முடியும். கோவில் உள்ளே மேல் தளத்திலிருந்து பார்த்தால் உட்புறம் முழுவதும் தெரிகிறது.

தாகூர்ஜிக்கு மூன்று விதமான சேவைகள் நடக்கின்றன. ஒன்று சிருங்கார். இந்தச் சமயத்தில் இறைவன் குளிப்பாட்டப்படுகிறார். பின் ஆடை , அணிகலன்களால் அலங்கரிக்கப்படுகிறார். அடுத்தது ராஜபோக். மதியம் குழந்தைக்கு ஏற்ற விருந்து வைக்கப்படும் சேவை. கடைசியில் சாயன். குழந்தை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கப்படுகிறது.

கோவில் கட்டி 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கோவிலின் வசீகரம் இன்னும் குறையவில்லை. ஜன்மாஷ்டமியன்று பகலில் தரிசனம் கிடையாது. இரவு பன்னிரண்டு மணிக்கு, அதாவது கேசவன் பூமியில் ஜனித்த நேரம்தான், பக்தர்களுக்குக் காட்சி கிடைக்கும்; நடை திறக்கும். சிரவண (மழைக்காலம்), பல்குன (பங்குனி) மாதங்களில் மூலவர் வெளியே வந்து தரிசனத்திற்காக வைக்கப்படுவார்.

குதித்தோடும் யமுனை

யமுனா நதி தீரம் செல்கிறோம். இங்கேயும் படித்துறைகள் உண்டு. கேசி காட் , விஸ்ராம் காட் என்பவைதான் பிரபலமானவை. புது வெள்ளம் வந்த மகிழ்ச்சியில் யமுனை குதித்து ஓடிக்கொண்டிருக்கிறாள். மாலை ஆறு மணிக்கு இங்கேயும் நதிக்கு மங்கள ஆரத்தி உண்டு.

ஒரு சிறிய படகு சவாரி. ஓட்டுநர் மீரா பாடல்களை இசைக்கிறார். கரையில் இரு மருங்கிலும் கோவில்கள். நீல நிறத்தில் பாலகன் ஒருவன் வேணு கானம் இசைக்கிறான். வேஷம்தான் என்றாலும் மனம் அங்கே நங்கூரமிடுகிறது. மனம் வேறு ஏதாவது பக்கம் திரும்பினாலும், எண்ணங்கள் வேறு திசையில் இழுத்துக்கொண்டு போனாலும், அந்த இடத்தின் சூழல், நிகழ்வுகள் தம் பக்கமாக நம்மை இழுத்துக்கொள்கின்றன. அதுதான் பிருந்தாவனத்தின் மாயம்.

கோவில் வந்த கதை: கண்களைக் கூசவைத்த ஒளி

கோவிலில் நிறுவப்பட்டுள்ள பிஹார்ஜியின் உருவத்தை சுவாமி ஹரிதாஸ் என்ற மகானுக்கு தெய்வத் தம்பதிகளான ராதா கிருஷ்ணர்களே நேரில் அளித்ததாக நம்பப்படுகிறது. சுவாமி ஹரிதாஸ் உத்தரப் பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய மூதாதையர் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பெயர் வைக்கும் வைபவத்தில் வசுதேவர் அழைப்பில் பங்கேற்றவர்கள் என்று ஐதிகம்.

சுவாமி ஹரிதாஸ், லலிதா என்ற கோபிகையின் மறு அவதாரம் என்று கருதப்படுகிறது. அவர் திருமணமான பின்பு இல்வாழ்க்கையைத் துறந்து பிருந்தாவனத்திற்கு வந்து நிதிவன் என்ற அடர்ந்த துளசிக் காட்டில் தங்கியிருந்தார். ஹரி நாம ஸ்மரணையிலேயே மூழ்கியிருந்தார். அது ஒதுக்குப்புற இடமாதலால் அவருடைய சீடர்கள் ஒருநாள் அங்கே அவரைக் காண வந்தனர். அந்த இடம் ஒளி வெள்ளத்தில் இருந்ததால் அவர்கள் கண்கள் கூசின. கேள்விப்பட்டு அங்கே வந்த ஹரிதாஸ் இறைவனைக் காட்சி தரும்படி இறைஞ்சினார். கிருஷ்ணரும் ராதையுடன் அங்கே தோன்ற, எல்லோரும் மகிழ்ச்சியில் ஸ்தம்பித்துப்போயினர். அந்த அழகில் மெய்மறந்து சிலைபோல் ஆகினர்.

கோஸ்வாமிகளுக்கு வழிவழியாக அளிக்கப்பட கதைப்படி அந்த ஒளி மிகுந்த ஸ்வரூபத்தை மக்கள் காண முடியாது என்பதால் இருவரும் ஓருருவமாக மாற அச்சுதனை வேண்ட (மேகமும் மின்னலை போல) அவர்களும் அப்படியே மாறினர். அதுதான் இப்போது நாம் கோவிலில் காணும் கருப்பு நிற விக்ரகம் என்று சொல்லப்படுகிறது.

பிஹார்ஜிக்கு சேவை செய்ய ஜெகந்நாத கோஸ்வாமி என்பவர் அமர்த்தப்பட்டார். இன்றைக்கும் அவர் வழியில் வந்தவர்தான் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். முதலில் இந்த சுந்தர வடிவம் நிதி வனத்திற்கு அருகேயே ஒரு கோவிலில் வைக்கப்பட்டது. பிறகு பீஹாரிஜிக்கு ஏற்றவாறு 1856-ல் ஒரு கோவில் உருவானது. அப்போதிருந்த ராஜஸ்தானி பாணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானத்தைக் கட்டிடக் கலையின் உன்னதம் என்று சொல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்