108 வைணவ திவ்ய தேச உலா - 48 | திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும். கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.

இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து

அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்

அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.

(815 – திருச்சந்தவிருத்தம் - 64)

மூலவர்: பாண்டவ தூதர்,

தாயார்: சத்யபாமா, ருக்மிணி

தீர்த்தம்: மத்ஸ்ய தீர்த்தம்

விமானம்: பத்ர விமானம்

தலவரலாறு

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம்.

திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார்.

இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)

கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் ‘பாண்டவதூதப் பெருமாள்’ என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுகளில் ‘தூதஹரி’ என குறிப்பிடப்படுகிறார்.

மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.

திருப்பாடகம் ஒரு கிருஷ்ணர் தலம் என்பதால் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான ப்ரீதி தலமாகவும் விளங்குகிறது. (ரோகிணி கிருஷ்ணரை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் முதலில் ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணியையும் அக்னி சக்திகளைக் கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திரங்களை மணந்தார். தனக்கு ஞான சக்திகளையும் விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணரை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபடுவதாகக் கூறுவர்.)

பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

கருவறை மிகவும் பெரியதாக இருப்பதால், அர்ச்சகர்கள் தீவட்டியைக் காட்டி மூலவரின் திருமுகத்தை நாம் தரிசனம் செய்ய உதவுகிறார்கள். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர்.

ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.

சக்கரத் தாழ்வார் மத்ஸ்ய தீர்த்தத்துக்கு எதிரே தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். திருமாலின் அவதாரங்களில், பத்தாவதாக இனி வரப்போகும் கல்கி அவதாரம் நீங்கலாக உள்ள நவ அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யம் (மீன்) – ஒன்பதாவது கிருஷ்ணன் என்று தன் அவதாரங்களின் முழு வட்டத்தை பூர்த்தி செய்திருக்கிறார் திருமால். அதனால்தான் முதல் அவதாரமான மத்ஸ்யம், தீர்த்த உருவிலும், ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் கருவறையிலுமாகக் காட்சி தருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இங்கு சக்கரத்தாழ்வார் ஸ்தாபிதம் நடந்துள்ளது. பக்தை ஒருவருக்கு திருமால் கனவில் வந்து சக்கரத்தாழ்வாருக்கு ஒரு கோயில் உருவாக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அந்த பக்தை காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல அவரும் பாண்டவ தூதர் கோயில் வளாகத்திலேயே அந்த சந்நிதியை அமைக்குமாறு யோசனை தெரிவித்திருக்கிறார். அப்படி அமைந்தவர்தான் இந்த சக்கரத்தாழ்வார்.

கிருஷ்ண ஜெயந்தி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திர தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது. பகவான் கிருஷ்ண பரமாத்மாவே இங்கு மூலவராக வீற்றிருப்பதால், தீபாவளி திருநாள் இங்கே விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கெல்லாம் நடைபெறும் கருட சேவை குறிப்பிடத்தக்க ஒன்று.

கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.

காரியத் தடைகள் நீங்க, புதிய முயற்சியில் வெற்றி வாகை சூட திருப்பாடகப் பெருமாளை வளர்பிறை சதுர்த்தி அன்று தரிசனம் செய்து ஹோமம் செய்தால், அனைத்து தடங்கல்களையும் பெருமாள் போக்குவார் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: பெரிய காஞ்சிபுரம் கங்கை கொண்ட மண்டபம், சங்கர மடம், திருவேகம்பநாதர் கோயில் ஆகியவற்றுக்குத் தென்மேற்கில் 0.5 கிமீ தொலைவில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE