108 வைணவ திவ்ய தேச உலா - 37.திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் கோயில், 37-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருநாங்கூரில் இருந்து கிழக்கே 4 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மணிக்கூடம் போன்ற அமைப்பில் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை
ஒண் திறல் தின்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலார் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.

மூலவர்: வரதராஜப் பெருமாள் (கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன்)

தாயார்: திருமாமகள் நாச்சியார்

தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம்

விமானம்: கனக விமானம்

தல வரலாறு

தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். இதில் கோபம் கொண்ட தக்கன், சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என்று சாபமிட்டார்.

தக்கனின் சாபம் காரணமாக, முழு சந்திரன் தேயத் தொடங்கினார், சாபம் விமோசனம் பெறுவதற்காக ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு சென்றுவிட்டு, நிறைவாக திருமணிக்கூடத்துக்கு வந்தார் சந்திரன். திருமணிக்கூடத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சந்திரன் வழிபடும்போது, திருமணிக்கூட நாயகன், சந்திரனுக்கு வரதராஜராகக் காட்சி அளித்தார். சந்திரன் சாப விமோசனம் கிடைத்து, அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டார்.

கருடாழ்வாருக்கு தரிசனம்

சந்திரன் சாப விமோசனம் பெறுவதற்கு இங்கு வந்து வழிபாடு செய்தபோது, அவருக்கு பெருமாள் தரிசனம் அளித்தது போன்று தனக்கும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று பெரிய திருவடி கருடாழ்வார், திருமாலை வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று திருமணிக்கூட பெருமாள் கூறியதோடு மட்டும் இருக்காமல், கருடாழ்வாருக்கும் காட்சி கொடுத்து வாழ்த்தினார்.

கோயில் அமைப்பும், சிறப்பும்

கோயிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கருடாழ்வார் சந்நிதி, மகாமண்டபம், அர்த்த மண்டபங்களைக் காணலாம். கனக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி உள்ளார். அவரது வலது புறத்தில் சதுர வடிவில் அமைந்துள்ள பத்ம பீடத்தின் மீது நின்றபடி வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கரத்தை தொங்கவிட்ட படியும் ஸ்ரீதேவி அருள்பாலிக்கிறார். இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்கவிட்டபடியும் அருள்பாலிக்கிறார். அருகில் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். அர்த்த மண்டபத்தின் வடக்கு திசையில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாத கருட சேவை நாட்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க, பெண் குழந்தைகளை காப்பாற்ற, மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு எளிதில் திருமணம் நடைபெற, திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய, இத்தல பெருமாளும் தாயாரும் அருள்புரிவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE