108 வைணவ திவ்ய தேச உலா - 35 | திருத்தேவனார்த் தொகை

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகப் பெருமாள் கோயில், 35-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருநாங்கூரில் இருந்து 1 கிமீ தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

திருநாங்கூரில் உள்ள பதினோரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள திருமாலை சேவிக்க தேவர்கள் நிறைய பேர் இவ்விடத்தில் கூடி நின்றதால் இத்தலம் தேவனார்த் தோகை ஆயிற்று. திருப்பாற்கடலில் தொன்றிய திரு மகளை, பெருமாள் (தேவனார்) மணம் முடிப்பதைக் காண தேவர்கள் தொகையாக (கூட்டமாக) வந்ததால், திருதேவனார்த் தொகை என்று பெயர் கிட்டியதாகவும் கூறப்படுகிறது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை பெரிய திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

போதலர்ந்த தொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள்

தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல்

மாதவன் றானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு

தேதென வென்றிசை பாடும் திருந்தேவனார்த் தொகை.

மூலவர்: தெய்வநாயகன், மாதவ நாயகன்

தாயார்: கடல்மகள் நாச்சியார்

தீர்த்தம்: சோபன புஷ்கரிணி, தேவஸபா புஷ்கரிணி

விமானம்: சோபன (மங்கல) விமானம்

தல வரலாறு

துர்வாச முனிவர் வைகுண்டம் சென்றிருந்த சமயத்தில், அவருக்கு திருமாலின் மாலை பரிசாக அளிக்கப்பட்டது. அதை அவர் இந்திரனிடம் கொடுத்தார். ஆனால் இந்திரன் அந்த மாலையை தனது ஐராவத யானை மீது வீசினார். இந்திரனின் செயலைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த முனிவர், ‘திருமால் மார்பில் வாசம் செய்பவர் திருமகள். அங்கிருந்து கிடைக்கப் பெற்ற மாலையை உதாசீனப்படுத்தி விட்டாய்” என்று கூறி, எந்த செல்வமும் இந்திரனிடம் தங்காது என்று சபித்துவிடுகிறார். அதனால் ஐராவதம் மறைந்து வைகுண்டம் செல்கிறது, செல்வங்கள் அனைத்தும் இந்திரனைவிட்டு அகன்றன.

அதிர்ச்சியில் உறைந்த இந்திரன், தனது தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கோரினார். இறைவனது பிரசாதமும் இறைவனும் ஒன்றுதான் என்பதை இந்திரனுக்கு விளக்கிய முனிவர், சாபத்துக்கான விமோசனத்தை அவரது குருநாதரிடம் கேட்கப் பணித்தார்.

கங்கைக் கரையில் தவம் செய்து கொண்டிருக்கும் குரு பிரஹஸ்பதியிடம் சென்று, சாபத்துக்கான விமோசனம் குறித்து கேட்டார் இந்திரன். அதற்கு பதிலளித்த குரு பிரஹஸ்பதி, “ஒவ்வொருவரும் பிறக்கும்போதே, அவரவர் முன் ஜென்ம வினைக்கேற்ப, பிரம்மதேவர் பலனை எழுதிவிட்டார். இனி யாராலும் அதை மாற்ற முடியாது. வேண்டுமானால் பிரம்மதேவரிடமே இது குறித்து கேட்கவும்” என்று இந்தினை அனுப்பினார். உடனே பிரம்மதேவரைக் காண ஓடினார் இந்திரன்.

தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறிய பிரம்மதேவர், இதுகுறித்து திருமாலிடம் சரணடைய வேண்டும் என்று இந்திரனிடம் கூறுகிறார். திருமாலிடம் சரண்புகுந்தார் இந்திரன்

தன் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் தானும் திருமகளும் தங்க மாட்டோம் என்று கூறிய திருமால், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடையும் வரை இந்திரனைக் காத்திருக்கப் பணித்தார். அப்போது இந்திரனின் சாபம் நீங்குவதோடு மட்டுமல்லாமல், திருமால் - திருமகள் திருமணத்தையும் காணும் பேறு கிட்டும் என்றும் கூறுகிறார்.

அதேபோல் பாற்கடல் கடையும் காலம் வந்தது, அதில் இருந்து மகாலட்சுமி, ஐராவதம் போன்றவர்கள் தோன்றினர். இந்திரன் மகாலட்சுமியைப் போற்றினார். திருமகளும் இந்திரனுக்கு ஒரு மாலையை பரிசாக அளித்தார். அதை தன் கண்களில் ஒற்றிக் கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனார்.

திருமாலுக்கும் திருமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண தேவர்கள் தொகையாக வந்ததால் இத்தலத்துக்கு திருத்தேவனார்த் தொகை என்ற பெயர் கிட்டியது.


கோயில் அமைப்பும், சிறப்பும்

வைகுண்டத்தில் திருமால் வாசம் செய்வதாகக் கூறப்பட்டாலும், பல அவதாரங்கள் எடுத்து, பெரும்பாலும் அவர் பூலோகத்திலேயே வாசம் செய்கிறார். அவரை தேவலோகத்தில் காண இயலாமல், தேவர்கள் பூலோகத்துக்கு வந்து அவரது தரிசனம் பெறுவர். அப்படி ஒரு தெய்வத் திருமணமே திருத்தேவனார்த் தொகையில் நடைபெற்றுள்ளது.

சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கிமீ, திருநாங்கூருக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் மாதவப் பெருமாள் அமைந்துள்ளது. இங்கு மூலவர் தெய்வ நாயகப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயார் தெய்வநாயகி, கடல்மகள் நாச்சியார், மாதவி நாயகி ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்துள்ளது. விமானத்தின் நிழல் விமானத்திலேயே அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

வசிஷ்டருக்கு திருமால் தரிசனம்

பல காலம் வசிஷ்ட முனிவர் திருமாலை நோக்கி தவம் புரிந்தும் அவருக்கு தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் இத்தலத்துக்கு வந்து வசிஷ்ட முனிவர் தவம் இயற்றினார். உடனே வசிஷ்டருக்கு திருமால் தரிசனம் கிடைத்தது. வசிஷ்டருக்குக் கிடைத்த தரிசனம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தேவர்கள் திருமாலிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி அனைவருக்கும் இத்தலத்தில் திருமால் தரிசனம் கிடைத்தது.


திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி தினத்தில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இத்தலம் ஓர் அருமருந்தாக அமைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்