108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருவைகுந்த விண்ணகரம், 33-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் ஒன்றாக போற்றப்படும் இத்தலத்தில், பெருமாள் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-
மூலவர்: வைகுண்ட நாதர், தாமரைக் கண்ணன்
தாயார்: வைகுந்த வல்லி
தீர்த்தம்: லட்சுமி புஷ்கரிணி, உத்தரங்க புஷ்கரிணி
விமானம்: அனந்த சத்ய வர்த்தக விமானம்
தல வரலாறு
ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தார், தெய்வ பக்தி நிறைந்தவர், திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டதால், வைகுண்டம் சென்று அவரை தரிசிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார், அவரது மனைவி தமயந்தியும் உடன் வருவதாகக் கூறினார்.
ஸ்வேதகேது அரசராக இருப்பதால், தனது கடமைகளை முடித்துவிட்டு, மனைவியுடன் தவம் செய்யும்பொருட்டு கிளம்பினார். தங்களைச் சுற்றி தீ வளர்த்து, அரசரும் அவரது மனைவியும் நடுவில் நின்று திருமாலை நோக்கி தவம் புரிந்தனர். நீண்ட நாள் தவம் இருந்து, தங்கள் பூதவுடலைத் துறந்து வைகுண்டம் சென்றனர்.
வைகுண்டநாதனைக் காண வேண்டும் என்ற ஆவலில் உள்ளே நுழைந்தால் அங்கு வைகுண்ட வாசனைக் காணவில்லை. இருவரும் வருத்தத்தில் இருந்தபோது அங்கு வந்த நாரத முனிவரை தரிசிக்கின்றனர். தங்களுக்கு வைகுண்டநாதனின் தரிசனம் கிடைக்காததன் காரணத்தை அவரிடம் வினவினர். அதற்கு நாரதர், “நீங்கள் தவம் செய்திருந்தாலும், நிறைய தான தர்மங்கள் செய்யவில்லை. இறைவனுக்காக ஹோமங்கள் செய்யவில்லை. அதனால் தான் உங்களுக்கு வைகுண்டத்தில் திருமாலின் தரிசனம் கிடைக்கவில்லை” என்றார்.
மேலும், “பூவுலகில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி முறையிட்டால், அவரது அருளால் வைகுண்டநாதனின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்” என்றார்.
இதைத் தொடர்ந்து இருவரும் ஐராவதேஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தனர். ஸ்வேதகேதுவுக்கும் தமயந்திக்கும் சிவபெருமான் காட்சிகொடுத்து, “நாம் மூவரும் திருமாலின் தரிசனத்துக்காக தவம் இருப்போம்” என்றார். மூவருடன் உதங்க முனிவரும் சேர்ந்து கொண்டு, நால்வரும் திருமாலை நோக்கி தவம் புரிந்தனர். நீண்ட காலத்துக்குப் பின் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், நால்வருக்கும் காட்சி கொடுத்து, அருளினார்.
நால்வருக்கும் திருமால் காட்சி கொடுத்த இடம் என்பதால் இவ்விடம் ‘வைகுண்ட விண்ணகரம்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்றும், ‘வைகுண்ட நாதர்’ என்ற திருநாமத்துடன் திருமால் இங்கு கோயில் கொண்டு அருளவேண்டும் என்றும் சிவபெருமான் திருமாலிடம் வேண்டுகோள் விடுத்தார், அதன்படி வைகுண்ட வாசனாக திருமால் பூலோகத்தில், வைகுந்தவல்லி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.
கோயில் அமைப்பும், சிறப்பும்
பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே வைகுண்ட நாதனை தரிசிக்க இயலும். வைகுண்டத்தில் தேவர்களுக்கு திருமால் காட்சியளிப்பதுபோல் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பரமபதத்துக்கு சமமான தலமாக கருதப்படுகிறது.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தும் பொருட்டு, பரமபதநாதன் புறப்பட்டு வர, அவரைத் தொடர்ந்து 10 பெருமாள்களும் திருநாங்கூர் வருவதாக ஐதீகம்.
கோயிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. மூலவர் வைகுண்டநாதன் தாமரை பீடத்தின் மீது வலது காலை மடக்கி குத்திட்டு வைத்து இடது காலை தொங்கவிட்டு, இடது கரத்தை அரவத்தின் மீது வைத்தும், பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரம் ஏந்தியும், பின்புறம் ஐந்து தலை ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில், உபய நாச்சியார்களுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருமாலின் கருணையால் உதங்க முனிவருக்கு இத்தலத்தில் மோட்சம் கிடைத்தது. ஹிம்சகன் என்ற அரக்கனை, இத்தலத்துக்கு வரவழைத்து, புஷ்கரிணி நீரைப் பருக வைத்தார் திருமால். அதன்காரணமாக அவனது தீய எண்ணங்கள் அழிந்து, தர்ம சிந்தனை மேலோங்கியது.
விமானத்தில் கிரிவலப் பகுதியில் தென்புறத்தில் நரசிம்மர் உருவம், மேற்குப் பக்கத்தில் அரங்கநாதர் உருவம், வடக்குப் பகுதியில் வைகுண்ட நாதர் உருவம் சுதையில் வடிக்கப்பட்டுள்ளன.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி விழா, நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் சுவாமி, தாயார் வீதியுலா நடைபெறும். குடும்ப பிரச்சினை தீர, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, எதிரிகளால் தீமை ஏற்படாமல் இருக்க பக்தர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago