108 வைணவ திவ்ய தேச உலா | 32. திருமணிமாடக் கோயில்

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருமணிமாடக் கோயில், 32-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளைகளில், பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இதனால் பெருமாள் எப்போதும் அணையா (நந்தா) விளக்கு போல் பிரகாசமாக இருந்து பக்தர்களின் அறியாமை இருளைப் போக்குகிறார் என்று கூறப்படுகிறது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்!

நர நாரணனே! கருமாமுகில் போல்

எந்தாய் எமக்கே அருளாயென நின்று

இமையோர் பரவும் இடம் எத்திசையும்

கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே

களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து

மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே

மூலவர்: பத்ரி நாராயனர்

உற்சவர்: அளத்தற்கரியான்

தாயார்: புண்டரீக வல்லி

தல விருட்சம்: பலா

தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி

ஆகமம் / பூஜை: பாஞ்சராத்ரம்

விமானம்: பிரணவ விமானம்

தல வரலாறு

பார்வதி தேவியின் தந்தை தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தார். இதற்குச் செல்ல வேண்டாம் என்று பார்வதி தேவி, சிவபெருமானைத் தடுத்தார். இருப்பினும், சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்வது முறையல்ல என்பதை தந்தையிடம் வலியுறுத்துவதற்காக, பார்வதி தேவி யாகத்துக்கு சென்றார். இதனால் சினமடைந்த சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார், அவரது திருச்சடை முடி தரையில் பட்ட இடம் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின, 11 சிவ வடிவங்கள் தோன்றிய நிலையில், அவர்களும் சேர்ந்து தாண்டவம் ஆடினர்.

உலக உயிர்கள் கலக்கமடைந்ததால், முனிவர்கள், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருமாலை சந்தித்து, சிவபெருமானை சாந்தப்படுத்தும்படி வேண்டினர். இத்தலத்தில், (திருமணிமாடக் கோயில்) திருமால் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவபெருமான் முன்னர் தோன்றி, சிவபெருமானின் தாண்டவத்தை நிறுத்தினார், அனைத்து சிவ வடிவங்களையும் ஒன்றுபடுத்தினார். இதனால் இங்கு 11 பெருமாள் கோயில்களும் , 11 சிவன் கோயில்களும் உள்ளன. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமாக உள்ளார். இவரை தரிசித்தால், அனைவரையும் தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

பிரணவ விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.. பத்ரிகாசிரமத்தில் அஷ்டாட்சர மந்திரத்துக்கு விளக்கம் அளித்த நாராயணரே இங்கு அருள்கிறார், இக்கோயில் மாடம் போன்ற அமைப்பில் உள்ளதால், திருமணிமாடக் கோயில் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

தாயார் புண்டரீக வல்லி பிரகாரத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். பெருமாள், தாயார் இருவரையும் சேர்த்து, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமால் சாந்தப்படுத்திய சிவபெருமான் இக்கோயில் எதிரில் மதங்கீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனி கோயிலில் அருள்பாலிக்கிறார்.

பத்ரியில் இருக்கும் நாராயணர் 4 வேதங்களை குதிரையாக்கி, பிரம்மதேவரை தேரோட்டியாக அமர்த்தி, இங்கு எழுந்தருளினார், அதனால் இக்கோயில் தேர் அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளது, பிரணவ விமானம் ‘ஓம்’ என்ற அமைப்பில் தேரின் மேல்பகுதி போன்றே உள்ளது, கலச கும்பங்கள் ராஜ கோபுரத்தை நோக்கி உள்ளன. மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை, தைலக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.

அருகில் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவர் ‘நரநாராயணர்’ என்றும், அமர்ந்த நிலையில் இருக்கும் உற்சவர் ‘அளத்தற்கரியான்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கருட சேவை

பத்ரி நாராயணர் இத்தலத்துக்கு வரும்போது கருடன் மீது அமர்ந்து வராமல், தேரில் எழுந்தருளினார். பெருமாளை சுமக்க தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு, அவரை வேண்டினார் கருடாழ்வார். இதை உணர்த்தவே, சுவாமியின் திருவடிகளுக்கு நேராக இருக்க வேண்டிய கருடாழ்வார், இத்தலத்தில் கொடிமரத்தருகே சுவாமியின் பாதங்களுக்கு கீழே உள்ளார். கருடாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள், 11 மூர்த்திகளாக இருந்து, இத்தலத்தில் எழுந்தருள்கிறார். தை அமாவாசைக்கு மறுநாள், திருநாங்கூர் 11 திவ்ய தேச பெருமாள்கள் இங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE