108 வைணவ திவ்ய தேச உலா - 30.திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமர் கோயில்

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம், திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமர் கோயில், 30-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது.

தமிழக வைணவத் தலங்களுள் இத்தலத்தில் மட்டுமே புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் திருமால் அருள்பாலிக்கிறார். அவரது வள்ளல்தன்மையை உயர்த்திக் காட்டும் பொருட்டு, வண்புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். பராசவனப் புராணத்தில் இத்தலம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாளை அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்து, பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் அனைத்து நலன்களும் கிட்டும் என்று பாடியுள்ளார்.

பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்

ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனுறை கோவில்

நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேளியோடு ஆறங்கம்

வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமே.

மூலவர்: புருஷோத்தமர்

தாயார்: புருஷோத்தம நாயகி

தீர்த்தம்: திருப்பாற்கடல்

தல விருட்சம்: பலா, வாழை

விமானம்: சஞ்சீவி விக்ரக விமானம்

தல வரலாறு

வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் வேண்டிக் கொண்டு வந்தார். பெருமாளின் அனுக்கிரகத்தால் மகரிஷி, உபமன்யு என்ற ஆண்மகனை அருளப் பெற்றார்.

பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்துக்கு தினம்தோறும் சென்று, பூப்பறித்து, அதை மாலையாகத் தொடுத்து, பெருமாளுக்கு அணிவித்து வந்தார். ஒருநாள் வியாக்ரபாதர், நந்தவனத்துக்கு கிளம்பும்போது, குழந்தை உபமன்யுவும் அவருடன் வருவேன் என்று அடம்பிடித்து அழுதான்.

குழந்தையின் அழுகுரலுக்காக, நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். நந்தவனத்தின் வாசலிலேயே குழந்தையை அமரச் செய்துவிட்டு, வியாக்ரபாதர் மட்டும் நந்தவனத்துக்குள் சென்றார். சுற்றும் முற்றும் பார்த்த குழந்தை, தந்தையைக் காணாது அழுதது. மேலும் பசியாலும் துடித்தது. குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வந்த பரந்தாமனும் புருஷோத்தம நாயகியும், உடனே அங்கு திருப்பாற்கடலை தோற்றுவித்து, அதில் இருந்து பாலை எடுத்து குழந்தைக்கு அளித்தனர்.

கோயில் அமைப்பும், சிறப்பும்

மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்கிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமபிரான், சீதாப்பிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், சேனை முதலியார் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் 3 ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. ராமபிரான் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார்,

இத்தல தீர்த்தத்தில் பாசி படிவதில்லை. இத்தல பெருமாளின் விருப்ப மலராக செண்பகப் பூ உள்ளது. மணவாள மாமுனிகள் இத்தலத்தில் தங்கியிருந்து 2 வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.

இந்த சிறிய ஊரில் ஒரே தெருவில் திருமணிமாடக் கோயில், திருஅரியமேய விண்ணகரம், திருத்தேற்றியம்பலம், திருவண் புருஷோத்தமம் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன.

குமேதஸ் என்ற படிப்பறிவில்லாத ஒருவனை, இத்தலப் பெருமாள் மிகச் சிறந்த பண்டிதன் ஆக்கினார் என்று கூறப்படுகிறது.

வறுமை நீங்க, கல்வி அறிவு சிறக்க, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனர். மேலும் இளம் வயதில் பெற்றொரை இழந்து எவ்வித அரவணைப்பும் இல்லாதவர்களுக்கு திருநாங்கூர் புருஷோத்தமன் அடைக்கலம் தருவார் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

பங்குனி மாத பிரம்மோற்சவம், ஆவணி பவுர்ணமியில் பவித்ரோற்சவம் கொண்டாடப்படுகின்றன. தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருட சேவை பிரசித்தி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்