திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகும். ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் ஆகும்.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 25 | தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 24 | திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூ ரீரே.
மூலவர்: பரிமள ரங்கநாதர், சுகந்தவனநாதர்,
தாயார்: பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி,
தீர்த்தம்: இந்து (சந்திர) புஷ்கரிணி
தலவரலாறு
அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் ஏகாதசி விரதம். அம்பரீசன் ஏகாதசியில் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி சரியான நேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம். நூறாவது ஏகாதசி விரத நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தேவலோகத்தில் அனைவரும் கலக்கத்துடன் இருந்தனர்.
நூறாவது ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு தேவலோகப் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மானிடனுக்கு அப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் தேவர்கள் உறுதியாக இருந்தனர். தேவர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர்.
துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தைத் தடுக்கும் பொருட்டு பூலோகத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் முழுப் பயன் அவனுக்குக் கிடைக்கும்.
அம்பரீசன் உணவு உண்ணத் தயாராக இருந்த சமயத்தில், துர்வாச முனிவர் உள்ளே நுழைந்தார். முனிவர் வந்ததால் அவரையும் உணவருந்த அழைத்தான் அம்பரீசன். முனிவரும் அதற்கு சம்மதித்து, நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறிச் சென்றார்.
நீண்ட நேரம் முனிவர் வராததை நினைத்து கவலை அடைந்தான் அம்பரீசன். குறித்த நேரத்தில் (துவாதசி நேரம் முடிவடைவதற்குள்) உணவு அருந்த வேண்டுமே என்று வேதியர்களிடமும் அந்தணர்களிடம் கலந்தாலோசிக்கலானான்.
நீராடிவிட்டு காலம் தாழ்த்தி வந்தால், அதற்குள் துவாதசி நேரம் முடிந்துவிடும், அம்பரீசனின் ஏகாதசி விரதம் தடைபட்டு விடும் என்ற எண்ணத்தில் இருந்தார் துர்வாச முனிவர்.
துவாதசி முடிய இன்னும் சில மணித் துளிகளே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசி விரதத்தின் முழுப் பயனும் கிடைத்துவிடும் என்று தலைமைப் பண்டிதரின் ஆலோசனையின் பேரில், அவ்வாறு செய்து, தன் விரதத்தை பூர்த்தி செய்து, முனிவருடன் உணவருந்தக் காத்திருந்தான் அம்பரீசன்.
இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாச முனிவர் மிகவும் கோபம் அடைந்தார். ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன் இச்செயலுக்கு அஞ்சி, பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார்.
அனைத்து சம்பவங்களையும் அறிந்த துர்வாச முனிவர் பெருமாளிடம் மன்னித்து அருள வேண்ட, பெருமாளும் மன்னித்தருளினார். பின்பு, நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த அம்பரீசனிடம், “வேண்டியதைக் கேள்” என்றார் பெருமாள். அம்பரீசனும், “தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிய வேண்டும்” என்று வேண்ட, பெருமாளும் அவ்வண்ணமே இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயிலான இத்தலத்தின் வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. சந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் தலை அருகே காவிரித் தாயாரும், திருவடி அருகே கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும் அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.
மூலவர் பரிமள ரங்கநாத பெருமாள், வீர சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ‘வேத சக்ர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு விரதத்தைத் தொடங்கினால் கேட்டது அனைத்தையும் பெருமாள் கொடுப்பார் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பின், துளசியால் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபடுவது வழக்கம். தனிசந்நிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி அவனுடைய பிராயச்சித்தத்தை ஏற்று சாபம் தீர்ந்ததால் இந்து + ஊர் – இந்தளூர் ஆயிற்று. தனது பெயராலேயே இவ்வூர் வழங்கப்பட வேண்டும் என்று சந்திரன் பெருமாளிடம் வேண்டிக்கொண்டதால் இந்தளூர் என்று ஆனதாகக் கூறுவர். இத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும். காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதனின் கோயில்கள் அமைந்துள்ள நதித்தீவுகள் பஞ்சரங்க தலம் என்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் அரங்கம். (மண்டபம் / சபை).
ஆதிரங்கம் (ரங்கநாத சுவாமி – ஸ்ரீரங்கபட்டணம் – கர்நாடக மாநிலம்), மத்தியரங்கம் (கஸ்தூரி ரங்கன் - ஸ்ரீரங்கம் - தமிழ்நாடு), அப்பால ரங்கம் - அப்பால ரங்கன் - அப்பக் குடத்தான் திருப்பேர்நகர் என்ற கோவிலடி - தமிழ்நாடு), சதுர்த்தரங்கம் - ஹேம ரங்கன் (ஆராவமுதன் சாரங்கபாணி கோயில், கும்பகோணம் தமிழ்நாடு) பஞ்சரங்கம் - பரிமள ரங்கன் (மருவினிய மைந்தன் பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர், தமிழ்நாடு) ஆகியன பஞ்சரங்க தலங்கள் எனப்படும்.
திருவிழாக்கள்
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்துக்கு ஆளானவர்கள், பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும்.
அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago