108 வைணவ திவ்ய தேச உலா - 21 | நாதன்கோவில் ஜெகநாதப் பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் நாதன்கோவிலில் அமைந்துள்ள ஜெகநாதப் பெருமாள் கோயில் (நந்திபுர விண்ணகரம்) திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 21-வது திவ்ய தேசம் ஆகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலஸ்தான கோபுரத்தில் நந்திதேவரும் நான்முகனும் திருமாலை வணங்கிய நிலையில் உள்ளனர்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (1,438-1,447) செய்துள்ளார்.

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழியாமை முன நாள்

தம்பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தடமார்வர் தலை சேர்

வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ்

நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.

மூலவர்: ஜெகநாதர், விண்ணகரப் பெருமாள், நாதநாதன்

உற்சவர்: ஜெகநாதர்,

தாயார்: செண்பகவல்லி

தலவிருட்சம்: செண்பக மரம்,

தீர்த்தம்: நந்தி புஷ்கரிணி


தலவரலாறு

திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி செண்பகாரண்யம் (செண்பக மரங்கள் நிறைந்த வனம்) என்ற இத்தலத்துக்கு வந்து கிழக்கு நோக்கி தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவை திருமாலால் தாங்க முடியவில்லை. ஓர் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வெள்ளிக்கிழமை அன்று திருமகளை தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். அதன் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.

தாயார் கிழக்கு நோக்கி தவம் செய்தாள். திருமால் அவளை மார்பில் ஏற்றதால் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். செண்பக வனத்தில் தவம் செய்ததால் தாயாருக்கு செண்பகவல்லி என்ற பெயர் வழங்கலாயிற்று. இத்தல பெருமாள் ஜெகநாதன் என்பதால் இவ்வூர் நாதன்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

இத்தல பெருமாள் தொடக்க காலத்தில் கிழக்கு பார்த்துதான் அருள்பாலித்தார். திருமகளை ஏற்பதற்காகவும், சிபிச்சக்கரவர்த்தியின் தியாக உணர்வைக் காண்பதற்காகவும் (புறாவுக்கு அடைக்கலம் தந்த சம்பவம்) மேற்கு பார்த்து அருளுகிறார். இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார்.

(தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச்சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார்.)

ஒரு சமயம் நந்திதேவர், திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றார். ஆனால் நுழைவாயில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காமல் நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபப்பட்ட காவலர்கள் நந்திதேவரை சபித்து விடுகின்றனர். காவலர்களை அவமதித்து உதாசீனப்படுத்தியதால் நந்திதேவர் உடல் உஷ்ணத்தால் எரியும் என்பதே அச்சாபம்.

நடந்த சம்பவம் குறித்து ஈசனிடம் முறையிட்டார் நந்திதேவர். ஈசன். திருமகள் தவம் புரியும் செண்பக வனத்துக்குச் சென்று அத்தலத்தில் தவம் இருக்கும்படி நந்திதேவரிடம் கூறினார். அவ்வாறு தவம் இருந்தால் சாப விமோசனம் பெறலாம் என்றும் கூறுகிறார்.

நந்திதேவரும் அவ்வாறே திருமாலை நோக்கி தவம் இருந்தார். நந்திதேவரின் தவத்தால் மகிழ்ந்த திருமால், அவருக்கு சாப விமோசனம் அளித்து, தன்னை தரிசிக்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்திதேவர் பெயரால் இத்தலம் நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்படும் என்று அருளினார். மூலஸ்தானத்தில் நந்திதேவரும் நான்முகனும் திருமாலை வணங்கிய நிலையில் உள்ளனர்.

விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தனது அன்னை விரைவில் குணமாக வேண்டும் என்று இத்தலத்தில் வேண்டினார். பெருமாளும் அருள்பாலித்தார். தனது தாய் குணமானவுடன், ஓர் அரசர் அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை இத்தலத்துக்கு கொடுத்து, பல அரிய திருப்பணிகளைச் செய்தார். இத்தலத்தில் அவரது இரண்டு மனைவிகள், தாயுடன் அவர் நின்றிருக்கும் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் என்று அழைக்கப்படுகிறது. நந்திதேவர், சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இத்தலம் ‘தட்சிண ஜகந்நாதம்’ என்று அழைக்கப்படுகிறது. காளமேகப் புலவர் இவ்வூரில் அவதரித்தார். திருமங்கையாழ்வார் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

சந்திர தோஷம் நீக்கும் திருத்தலம் இதுவாகும். சந்திர தோஷம் நீங்க, வேண்டியது நிறைவேற, பெருமாள் மனதில் இடம்பிடிக்க, திருமணத் தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை வரம் கிடைக்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, நரம்பு நோய் நீங்க இத்தல பெருமாள் அருள்பாலிப்பார்.

(இத்தலம் பெருமாளின் ஐந்து விண்ணகரங்களில் ஒன்று. மற்ற நான்கு விண்ணகரங்கள் – திருஅரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தன் பெருமாள்), திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தப் பெருமாள், திருநாங்கூர்), திருகாழீச் சீராம விண்ணகரன் (தாடாளன் பெருமாள், சீர்காழி), திருபரமேச்சுர விண்ணகரம் (பரமபதநாதன் கோயில், காஞ்சிபுரம்)

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்