திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வாகன சேவையை விமரிசையாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது.
அதன்படி, கடந்த 27-ம் தேதி, முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புரட்டாசி மாதம் என்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதலான பக்தர்கள் இந்த பிரம்மோற்சவத்தில் பங்கேற்றனர். புரட்டாசி 2-வது சனிக்கிழமையான அக்டோபர் 1-ம் தேதி இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் பங்கேற்க லட்சகணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து தங்க தேரோட்டம், பழமையான தேர்த் திருவிழா என பிரம்மோற்சவம் களை கட்டியது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 8 மாநிலங்களை சேர்ந்த 1,906 நடன கலைஞர்கள், 91 குழுக்களாக மாட வீதிகளில் நடனக் கலை புரிந்து பக்தர்களை வெகுவாக கவர்ந்தனர்.
இந்நிலையில் நிறைவு நாளான நேற்று காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் கோயிலில் இருந்து தேவி, பூதேவி சமேதராக மலையப்பரும் சக்கரத்தாழ்வாரும் தங்க திருச்சியில் கோயில் புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. இதையடுத்து புஷ்கரணியில் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது இதற்கென காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். இதன் பின்பு தங்க திருச்சியில் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்கு செல்லப்பட்டனர்.
மாலையில் உற்சவர்கள் மாட வீதிகளில் தங்க திருச்சியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதைத் தொடர்ந்து தங்க கொடி மரத்திலிருந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
ரூ.20.43 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில், கடந்த 8 நாட்களில் மட்டும் பக்தர்கள் ரூ. 20.43 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.இது குறித்து நேற்று திரு மலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
ஏழுமலையானின் பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட தேவஸ்தான ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீஸார், பஸ் போக்குவரத்து கழகத்தினர் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
முதன்முறையாக இம்முறை சாமானிய பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. விஐபி பிரேக் தரிசனம் உட்பட, ரூ. 300, ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவை தரிசனம் என அனைத்து தரிசனங்களும் நிறுத்தப்பட்டன. நேரில் வந்த விஐபிக்களுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் நாளான கடந்த மாதம் 27ம் தேதி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழ்ங்கினார். பின்னர் ரூ.23 கோடியில் பரகாமணி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனால், கடந்த 8 நாட்களில் திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 56. 69 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் கருட சேவை நாளன்று மட்டும் 81,318 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு ஒய்.வி. சுப்பாரெட்டி கூறினார்.
முதன்முறையாக இம்முறை சாமானிய பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. விஐபி பிரேக் தரிசனம் உட்பட, ரூ. 300, வாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவை தரிசனம் என அனைத்து தரிசனங்களும் நிறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago