108 வைணவ திவ்ய தேச உலா - 15 | திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட பூமி.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்

துயிலமர்ந்த பண்பா என்றும்

மைவிரியும் மணிவரைபோல் மாயவனே

என்றென்றும், வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்

திருவடியைச் சிந்தித் தேற்கு, என்

ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க்

காளாமென் அன்பு தானே.

மூலவர்: சாரநாதன்

தாயார்: சாரநாயகி – பஞ்சலட்சுமி

தீர்த்தம்: சார புஷ்கரிணி

விமானம் : சார விமானம்


தல வரலாறு

ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவிழ்ந்தார்.

தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், “தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்” என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

ஆதிசேஷன் மீது திருமகளுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த திருமால், ஒருசமயம் பிரம்மதேவனை அழைத்து பிரளய காலம் வருகிறது என்றார். மேலும் பிரம்மதேவனை பூலோகத்துக்கு சென்று ஒரு புனித தலத்தில் இருந்து மண் எடுத்து குடம் செய்து, அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய்யுமாறு பணித்தார். பல கோயில்களில் இருந்து மண் எடுத்து குடம் செய்ய முயன்றார் பிரம்மதேவன். ஆனால் குடம் உடைந்த வண்ணமே இருந்தது. இதுகுறித்து திருமாலிடம் கூறினார் பிரம்மதேவன்.

திருமாலும் உடனே திருச்சேறை சென்று சார தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து குடம் செய்யுமாறு பிரம்மதேவனிடம் கூறினார். பிரம்மதேவனும் அவ்வாறே குடம் செய்து வேத ஆகமங்களைப் பாதுகாத்தார்,

இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால் இத்தலத்தின் நாயகர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.

இக்கோவில் 500 முதல் 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் 90 அடி உயரமானது. இத்தல விமானத்துக்கு சார விமானம் என்று பெயர். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரித் தாய் ஆகியோருக்கு தனிசந்நிதிகள் உள்ளன. கோயில் உள்சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்யபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி, பால சாரநாதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். ஒரு சமயம் உப்பிலியப்பன் கோயிலில் மார்க்கண்டேயர் மகள் பூதேவியை பெருமாள் விரும்பினார். அப்போது மார்க்கண்டேயர் தனது மகளுக்கு சிறு வயது என்றும் அவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது என்றும் கூறுகிறார். மேலும் அவளை பெருமாளுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க முடியும் என்றும் கேட்கிறார். அதற்கு பெருமாள் அக்குழந்தை உப்பே போடாமல் சமைத்தாலும் அதை தான் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பூதேவியை ஏற்றுக் கொள்கிறார். அன்றைய தினத்தில் இருந்து பெருமாள் ‘உப்பிலியப்பன்’ என்ற பெயர் பெற்று, உப்பில்லாத நைவேத்யத்தை ஏற்றுக் கொள்கிறார். மார்க்கண்டேயர் திருச்சேறையில்தான் முக்தி அடைந்தார்.

அழகிய மணவாள நாயக்கர் மன்னர், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சந்நிதியின் திருப்பணிகள் செய்ய விரும்பினார். அதன்படி திருப்பணிகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிய வண்டிகள் திருச்சேறை வழியாக சென்றன. அப்போது நரசபூபாலன் என்பவன், மன்னனுக்குத் தெரியாமல் இக்கோயில் பணிகளுக்காக வண்டிக்கு ஒரு கல்வீதம் இறக்கி வைத்தான். இதுகுறித்து கேள்விப்பட்ட மன்னன், விசாரணை செய்வதற்காக இங்கு வந்தபோது பயந்துபோன நரசபூபாலன், பெருமாளை சரண்டைந்தான். பெருமாளும் மன்னனுக்காக மன்னார்குடி ராஜகோபாலனாக தோன்றி அருள்பாலித்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் பல செய்தான்.

திருவிழக்கள்

தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேரில் எழுந்தருளி பெருமாள் அருள்பாலிப்பார். தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலத்தில் பெருமாள் காவிரித் தாய்க்கு காட்சி அளித்தார். அதனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் சமயத்தில் இந்த சார புஷ்கரிணியில் நீராடுவது மகாமகத்துக்கு ஈடானது என்பதால் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் நீராடிய பலன் கிடைக்கும். செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்