108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலில் உள்ள வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோயில், 14-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இத்தலத்தில் நடைபெறும் கல்கருட சேவை, புகழ் பெற்றதாகும்.
இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். தாயார், கையில் கிளி, இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, அனைத்தையும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது. திருமங்கையாழ்வார் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 12 | கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 11. ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்
குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி கூடினான்
திருவடியே கூடகிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி
வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
மூலவர்: திருநறையூர் நம்பி
உற்சவர்: இடர்கடுத்த திருவாளன்
தாயார்: வஞ்சுளவல்லி
தல விருட்சம்: வகுளம் (மகிழம்)
தீர்த்தம்: மணிமுத்தா, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்பதீர்த்தம்
ஆகமம் / பூஜை: வைகானஸம்
விமானம்: ஹேம விமானம்
தல வரலாறு
திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று வஞ்சுள மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். முனிவரின் தவத்தில் மகாலட்சுமி மகிழ்ந்து, ஒரு பங்குனி மாத உத்திர நட்சத்திர தினத்தில், அவர் தவம் செய்த மரத்தடியில் குழந்தையாகத் தோன்றினார். குழந்தையின் அழுகுரல் கேட்டு, கண் திறந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வஞ்சுளவல்லி என்று பெயரிட்டார். தன் ஆசிரமத்திலேயே குழந்தையை வளர்த்து வந்தார்.
வஞ்சுளவல்லி தந்தையின் ஆசிரமத்தில் பல சேவைகள் செய்துக் கொண்டு வளர்ந்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக திருமால் 5 வடிவங்கள் (சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்) எடுத்து, ஒவ்வொரு திசையாகச் சென்று அவரைத் தேடி வந்தார். திருமாலுடன் வந்த கருடாழ்வார், பிராட்டி இருக்கும் இடம் அறிந்து அதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார்.
திருமாலும், மேதாவி மகரிஷியின் ஆசிரமம் சென்று, வஞ்சுளவல்லியை மணக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தன் மகள் சொல் கேட்டு நடப்பதாக இருந்தால் (பிராட்டியை முன்னிலைப்படுத்துதல்) அவளை மணமுடித்துத் தருவதாக, முனிவர் திருமாலிடம் கூறுகிறார்.
திருமாலுக்கும் வஞ்சுளவல்லிக்கும் கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது திருமால், தான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவராக இருப்பதால், கருடாழ்வாரே முன்னின்று பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார். அதை ஏற்ற கருடாழ்வார், இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிராட்டி பெயரால், இத்தலம் ‘நாச்சியார் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
முத்ராதானம்
நீலன் என்ற குறுநில மன்னர், திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தான் வைத்திருந்த பணம் அனைத்தையும் இறைபணிக்கே செலவு செய்தார். வைணவர் இல்லை என்ற காரணத்தால், அவரை யாரும் ஏற்கவில்லை. இதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார் நீலன்.
திருமாலும் மனம் உவந்து, வைணவ ஆச்சாரியராக வந்திருந்து நீலனுக்கு முத்ராதானம் செய்து வைத்தார். (ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக் கொள்வதற்காக அவரது கரங்களில் சங்கு, சக்கரம் அச்சு இடப்படுவதே முத்ராதானம் எனப்படும்). ஆச்சாரியராக வந்திருந்ததால் இத்தலத்து சீனிவாச பெருமாள், 2 கைகளுடன் உள்ளார். சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் காணப்படுகிறது .
தனக்கு வைணவர் என்று அங்கீகாரம் கொடுத்த இத்தல பெருமாள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடி, ‘நம்பி’ (பரிபூரண நற்குணங்கள் நிரம்பியவர்) என்று அழைத்து மங்களாசாசனம் செய்தார். இத்தலத்தில் மட்டுமே திருமால் ஆச்சாரியராக வந்திருந்து, முத்ராதானம் செய்துவைத்துள்ளார்.
தாயாரே பிரதானம்
மேதாவி முனிவருக்கு வாக்களித்தபடி, திருமால், இத்தலத்தில் தாயாருக்கே முன்னுரிமை அளித்து அருள்பாலிக்கிறார். அதன்படி தாயரை மையப்படுத்தியே கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளைவிட சற்று முன்புறம் தாயார் நின்ற கோலத்தில் அருள்கிறார். வீதியுலா செல்லும்போதும் தாயாருக்குப் பின்னரே பெருமாள் எழுந்தருள்கிறார், தாயாருக்கே முதலில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அனைத்தையும் தாயாரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, கையில் கிளி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி தாயார் அருள்பாலிக்கிறார்.
கல் கருடசேவை
நாச்சியார் கோவிலில் கருடாழ்வார் தனி சந்நிதியில் உடலில் 9 நாகங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார், இவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வீதியுலா செல்லும்போது மூலவரான கல்கருடன் (4 டன் எடை) மீதே சுவாமி எழுந்தருள்கிறார். கல்கருடனை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் 4 பேர் இவரை சுமந்து வருவர். பின்னர் 8, 16, 32 என்று அதிகரித்து 128 பேர் வரை சுமக்கிறார்கள். அதேபோல புறப்பாடு முடிந்து, கல்கருடனை கருவறையில் வைக்க வரும்போது 128 பேர் தொடங்கி 64, 32, 16, 8 என்று குறைந்து நிறைவாக 4 பேர் சுமப்பது இன்றும் நடைபெறுகிறது.
கோயில் அமைப்பும், சிறப்பும்
63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணார் கனவில் தோன்றிய திருமால், தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார், அதன்படி சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோயில் அமைப்பில் அவர் இக்கோயிலைக் கட்டினார்.
5 ஏக்கர் நிலப்பரப்பில் 75 அடி உயரமுள்ள ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. 5 பிரகாரங்களைக் கொண்ட இக்கோயில், கிபி 5-ம் நூற்றாண்டில் கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்ட ஒரு மாடக் கோயில் (யானை ஏற முடியாத கோயில்) ஆகும். மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏற வேண்டும். தாயாருக்கே முதலிடம் என்பதால் இக்கோயில் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு கீழே நவக்கிரகங்களும், அவருக்கு மேலே தசாவதாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கருடன் சந்நிதிக்கு அருகில் 108 திவ்ய தேசங்களின் உற்சவர் அமையப் பெற்றுள்ளன.
திருவிழாக்கள்
ஒவ்வொரு மாத திருவோண நட்சத்திரத்தில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறும். மார்கழி, பங்குனி பிரம்மோற்சவங்கள் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. கல் கருடசேவை பிரதானமாக இருப்பதால், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago