திருமலையில் நித்ய கல்யாணம்... பச்சை தோரணம்... - ஏழுமலையானுக்கு 365 நாட்களில் 470 விழாக்கள்

By என்.மகேஷ் குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம்,வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலை ‘நித்ய கல்யாணம், பச்சை தோரணம்’ கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர்.

நித்ய உற்சவங்கள்

சுப்ரபாதம்: திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்புகின்றனர். இங்குள்ள தங்க வாயிலில், தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியாரின் வம்சத்தினர் துயில் எழுப்புகின்றனர். சுப்ரபாதம் நிறைவடைந்த பின்னர், சந்நிதி யாதவர்கள் தங்க வாசலை திறப்பார்கள். சுப்ரபாத தரிசனத்தை ‘விஸ்வரூப தரிசனம்’ என்று அழைப்பர்.

தோமாலை சேவை: மூலவர், உற்சவ மூர்த்திகள் மற்றும் இதர விக்ரகங்களை மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் அலங்கரிப்பதையே ‘தோமாலை சேவை’ என்றழைக்கின்றனர். அதிகாலை நடைபெறும் இந்த தோமாலை சேவையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொலுவு: ஸ்னபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்திக்கு இந்த கொலுவு சேவையை நடத்துகின்றனர். அப்போது, அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் போன்ற பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. மேலும், முந்தைய நாளின் உண்டியல் விவரம் மற்றும் செலவு விவரங்கள் படிக்கப்படுகிறது. அதன் பின்னர் கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்திக்கு வெல்லம் கலந்து எள் மாவு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

சகஸ்ர நாம அர்ச்சனை: ஏழுமலையானுக்கு தோமாலை சேவைக்கு பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில், அர்ச்சகர்கள், ஏழுமலையானின் 1008 நாமங்களை அர்ச்சித்து, பாதங்களின் மீது துளசியை போட்டு வழிபடுவர். பின்னர், அந்த பாதங்களில் உள்ள துளசி இலைகளை எடுத்து, சுவாமியின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமி தேவிக்கு 24 நாமங்களை கூறி அர்ச்சனை செய்வார்கள்.

நைவேத்தியம்: மூலவருக்கு லட்டு, வடை, புளியோதரை, பொங்கல், தயிர் சாதம் உட்பட மேலும் பல பிரசாதங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதையே முதல் நைவேத்தியம் என்றழைக்கின்றனர். பின்னர் மதியம் 2-வது, இரவு 3-வது நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இரவு ஏகாந்த சேவைக்கு முன்சர்க்கரை பொங்கல் சுவாமிக்கு நைவேத்திய மாக படைக்கப்படுகிறது.

கல்யாண உற்சவம்: சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் மதியம் கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. கல்யாண உற்சவத்தில் தம்பதிகள் பங்கேற்று சுவாமியின் அருளைப் பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து வைபவ மண்டபத்தில் ஆர்ஜித பிரம்மோற்சவம் தினமும் நடத்தப்படுகிறது.

டோலோற்சவம்: மதியம் 2 மணிக்கு கண்ணாடி மண்டபத்தில் டோலோற்சவம் தினசரி நடத்தப்படுகிறது. ஆர்ஜித பக்தர்களுக்காக வைபவ மண்டபத்தில் ஹனுமன், கருடன், பெரிய சேஷ வாகன சேவைகள் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு வசந்தோற்சவம் நடத்தப்படும்.

சகஸ்ர தீப அலங்கார சேவை/ஊஞ்சல் சேவை: தினமும் மாலை 6 மணிக்கு கோயிலுக்கு வெளியே இந்த சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடத்தப்படுகிறது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊர்வலமாக மண்டபத்துக்கு அழைத்து வரப்படுவர். அதன் பின்னர் அங்கு சகஸ்ர தீபங்கள் ஏற்றி ஆராதனைகள் நடத்தப்படும்.

ஏகாந்த சேவை: தினசரி சேவைகளில் கடைசி சேவை ஏகாந்த சேவையாகும். இதை பவளிம்பு சேவை என்றும் அழைக்கின்றனர். இதில் பங்கேற்க ஆர்ஜித பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பின்னர், சயன மண்டபத்தில், வெள்ளி கொலுசுகளால் ஆன ஊஞ்சலில் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை தூங்க வைப்பார்கள். அப்போது அன்னமாச்சாரியார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சுவாமியை தூங்க வைக்க ‘ஜோ அச்சுதானந்தா... ஜோ ஜோ முகுந்தா’ என பாடி தூங்க வைப்பார். அப்போது தரிகொண்டா வெங்கமாம்பாள் சார்பில் சுவாமிக்கு ஆரத்தி கொடுப்பர். இந்த சமயத்தில் வெதுவெதுப்பான பால், வெண்ணெய், பழங்கள், நெய்யில் வறுத்த முந்திரி போன்றவை நைவேத்தியமாக படைக்கப்பட்டு, கோயில் நடை சாத்தப்படும்.

இவை தினசரி நடத்தப்படும் உற்சவங்கள் மற்றும் சேவைகளாகும்.

வார உற்சவங்கள்

விசேஷ பூஜை: ஒவ்வொரு திங்கள்கிழமையும், வைகானச ஆகம சாஸ்திரங்களின்படி, ஹோம பூஜைகள் நடத்தப்படும். மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சன சேவைகள் நடத்தப்படும்.

சகஸ்ர கலசாபிஷேகம்: ஒவ்வொரு புதன்கிழமையும் சுவாமிக்கு தங்கவாசல் அருகே சகஸ்ர கலசங்களை வைத்து நடத்தப்படும் விசேஷ பூஜையே சகஸ்ர கலசாபிஷேகம்.

திருப்பாவாடை சேவை: ஒவ்வொரு வியாழக்கிழமையும், அர்ச்சனைக்கு அடுத்து மூலவருக்கு நைவேத்தியம் படைப்பதையே திருப்பாவாடை சேவை அல்லது அன்ன கூடை உற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

அபிஷேகம்: பிரதி வெள்ளிக்கிழமை மட்டுமே திருப்பதி ஏழுமலையானுக்கு (மூலவர்)அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. மேலும், இதனையே பிரசாதமாகவும் வழங்குகின்றனர்.

மாத உற்சவங்கள்

மாத ஏகாதசி நாளிலும், சுவாமியின் திருவோணம் நட்சத்திரத்திலும், மற்றும் ரோகிணி, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களிலும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு கருட சேவை நடத்தப்பட்டு வருகிறது.

வருடாந்திர உற்சவங்கள்

கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்: தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் ஆகிய விசேஷ நாட்கள் வருவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை, வாசனை திரவியங்களால் ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.

உகாதி ஆஸ்தானம்: இது தெலுங்கு வருடப் பிறப்பன்று நடத்தப்படுகிறது. அன்றையதினம், மூலவருக்கு பட்டாடை உடுத்தப்படும். மேலும், உற்சவர் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.

ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்: ஸ்ரீராம நவமியன்று இந்த ஆஸ்தானம் கடைபிடிக்கப்படுகிறது. ராமரின் பட்டாபிஷேகம் வரை வேத பண்டிதர்கள் ராமரின் கதையை படிப்பார்கள். ஸ்ரீ பத்மாவதி பரிணயோற்சவம்: வைகாசி மாதம், நவமியன்று மாலை, மலையப்பரை யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை பல்லக்கிலும் நாராயணகிரி வனத்துக்கு கொண்டு செல்வர். அங்கு பரிணயோற்சவம் (திருக்கல்யாணம்) நடத்தப்படும்.

ஜேஷ்டாபிஷேகம்: ஆனி மாதத்தில் 3 நாட்கள் கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில் சுவாமிக்கு முத்து, வைர கவசங்கள் அணிவிக்கப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்படும்.

ஆனிவார ஆஸ்தானம்: ஆனி மாதம் கடைசி நாளன்று ஆனி வார ஆஸ்தானம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள், பூமாலைகள் மற்றும் மங்கலப் பொருட்கள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். உற்சவர் முன்னிலையில் வருடாந்திர கணக்கும் சமர்ப்பிக்கப்படும். மாலை, பூ பல்லக்கு சேவை நடக்கும்.

பவித்ரோற்சவம்: ஒவ்வொரு ஆவணி மாதமும் (ஸ்ராவண மாதம்) கோயிலில் தோஷபரிகார பூஜைகள் செய்யப்படும். இந்த மாதத்தில் வரும் தசமி, ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய திதிகளில் கல்யாண மண்டபத்தில் பவித்ரோற்சவம் நடைபெறும்.

பிரம்மோற்சவம்: ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படும். அதிக மாதம் வரும்போது 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படும். நவராத்திரி பிரம்மோற்சவம், சாலக்கட்டு பிரம்மோற்சவம் என இவை அழைக்கப்படுகிறது. இதில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்கள் மாட வீதிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு இவ்வாறு 365 நாட்களில் 470-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடைபெறுவதால், திருமலை எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். தினமும் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதால், ஏழுமலையான் கோயில் எப்போதும் வாழை மரமும், மாவிலை தோரணமுமாக காட்சியளிக்கும். இதனால்தான் ‘நித்ய கல்யாணம், பச்சை தோரணம்’ என்று பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE