108 வைணவ திவ்ய தேச உலா - 8. திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில்

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களுள், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில் 8-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருவையாற்றில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இக்கோயில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் சங்கம ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் இத்தலத்தை 10 பாடல்களை (1358 – 67) கொண்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.


கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ

ரேற்றா னெந்தை பெருமானூர் போல்

சேற்றேர் உழவர் கோதை போதூண்

கோற்றேன் முரலுங் கூடலூரே.

மூலவர்/ உற்சவர்: வையம்காத்த பெருமாள் / ஜெகத்ரட்சகன்

தாயார்: பத்மாசனவல்லி

தல விருட்சம்: பலா

தீர்த்தம்: சக்கர தீர்த்தம்

ஆகமம் / பூஜை: வைகானஸம்

விமானம்: சுத்தஸத்வ விமானம்


தல வரலாறு

இரண்யாட்சகன் என்ற அசுரன், பூலோகத்தில் உள்ள மக்களுக்கு பலவித இன்னல்களை அளித்து வந்தான். ஒரு சமயம் பூமாதேவியுடன் அவனுக்கு சண்டை ஏற்பட்டதால், பூமியை பாதாள லோகத்தில் மறைத்து வைத்தான். திருமால் வராக அவதாரம் எடுத்து, இந்த இடத்தில் தரையைப் பிளந்து பாளத்துக்குள் சென்று, அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியை மீட்டு வெளியில் வந்தார். இதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘புகுத்தானூர்’ என்று விளித்து மங்களாசாசனம் செய்துள்ளார். பூமியை மீட்டு வந்ததால், இத்தல பெருமாள் ‘வையம் காத்த பெருமாள்’ (ஜகத்ரட்சகன்) என்று அழைக்கப்படுகிறார்.

நந்தக முனிவர் இத்தலத்துக்கு தேவர்கள் முதலானோருடன் வந்திருந்து பெருமாளை வழிபட்டுச் சென்றதால், இவ்வூர் கூடலூர் என்று அழைக்கப்படுகிறது. தனது பொலிவை இழந்த காவிரி, இத்தலத்துக்கு வந்து தனது பொலிவை மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது.

ஒருசமயம் காவிரி வெள்ளத்தில், இக்கோயில் மூழ்கி, மணலால் சூழப்பட்டது. அப்போது ராணி மங்கம்மாள் கனவில் பெருமாள் தோன்றி, இக்கோயிலை புதுப்பிக்கும்படி கூறினார். அதற்கிணங்க, அரசி, இக்கோயிலை புதுப்பித்தார்.

அம்பரீஷ வரதர்

அம்பரீஷன் என்ற மன்னர், திருமால் மீது தீவிர பக்தி கொண்டு, தன் படைகள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். எதிரிகளிடம் தன் நாட்டை இழந்த நிலையிலும், திருமாலின் திருநாமத்தையே உச்சரித்து, அவருக்காக விரதங்கள் மேற்கொண்டு வந்தார். ஒருசமயம் ஏகாதசி விரத நாளில், மன்னரை சந்திக்க துர்வாச முனிவர் வந்தபோது, மன்னர் அவரை கவனிக்கவில்லை. கடும் கோபத்துக்கு ஆளான முனிவர், மன்னரை சபித்தார். வருந்திய மன்னர், தன்னைக் காக்குமாறு திருமாலிடம் வேண்டினார். தன் பக்தனை காப்பதற்காக, முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். தனது தவறை உணர்ந்த முனிவர், திருமாலிடம் மன்னிப்பு கோரினார். திருமால் முனிவரை மன்னித்தருளினார். அம்பரீஷன் திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டார். இதன் காரணமாக, பெருமாளுக்கு ‘அம்பரீஷ வரதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பு என்பதற்கு ஏற்ப, பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் பிரயோகச் சக்கரத்தை வைத்துள்ளார்.


கோயில் அமைப்பு

கோயில் ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வையம் காத்த பெருமாள் (உய்யவந்தார்) கையில் செங்கோல் ஏந்தி அருள்பாலிக்கிறார். தாயார் பத்மாசினி (புஷ்பவல்லி) தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. கோயில் மண்டபத் தூண்களில் ராணி மங்கம்மா, அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு பின்புறத்தில் உள்ள பலா மரத்தில் சங்கு வடிவம் தோன்றியுள்ளது. பெருமாளின் சக்கரம் துர்வாச முனிவரை துரத்திச் சென்றபோது, இங்கு பிரதானமாக சங்கு இருந்துள்ளதை உணர்த்தும்விதமாக, தல விருட்சத்தில் சங்கு வடிவம் உள்ளது. பெருமாளுக்கு கற்கண்டு, வெண்ணெய் படைத்து வணங்கினால் செல்வம் பெருகும், குடும்ப வாழ்க்கை சீர்படும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி தினத்தில் 108 தாமரை மலர்களுடன் ‘ஸ்ரீசுக்த ஹோமம்’ நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்