திருச்சானூரில் நவம்பர் 20 முதல் 28 வரை பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

By என்.மகேஷ்குமார்

திருமலை: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடத்துவது ஐதீகம். அதுபோல் இந்த ஆண்டும், வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி தாயார் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் வாகன சேவை நடைபெற உள்ளது. நிறைவு நாளான 28-ம் தேதி பஞ்சமி தீர்த்த சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் இவர் பேசுகையில், ‘‘2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தாயார் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால், பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், அன்ன பிரசாதம், கூடுதல் பஸ் போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இம்மாதம் 27-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கி, அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையான, அக்டோபர் 1-ம் தேதிஇரவு புகழ்பெற்ற கருட சேவைநடைபெற உள்ளது. பிரம்மோற் சவத்தையொட்டி, வரும் 27-ம் தேதி மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE