ஆலயம் ஆயிரம்: மலையிலிருந்து மடுவுக்கு வந்த பெருமாள்!

By ஆர்.அனுராதா

திருமலையில் கோயில் கொண்டுள்ள திருமால், சிலாத் திருமேனியாக மாறி நின்று அருளும் ஊர் சேங்கனூர். கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில் நெடுங்கொல்லை கிராமம் தாண்டி, சேங்கனூர் கூட்ரோட்டில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சேங்கனூர் சாலை பாதையில் ஒரு கி.மீ. சென்றால் ஊரை அடையலாம்.



வேங்கடவன் கொடுத்த சாளக்கிராமம்

தற்போது சேய்ஞலூர் என வழங்கும் ஊரில் யாமுன தேசிகருக்கும், நாச்சியார் அம்மாளுக்கும் கி.பி 1227-ல் பூர்வசிகை அந்தணர் குலத்தில் ஆவணி ரோகிணியில் அருளாளர் கிருஷ்ணசூரி அவதரித்தார். கிருஷ்ணசூரி சிறு வயது முதலே விஷ்ணு பக்தியே சாரம் என்பதை உணர்ந்து பெருமாள் மீது தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார். இள வயதிலேயே இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். தம் மனைவியுடன் திருமலை சென்றவர் வேங்கடமுடையானை தரிசித்து, அனைத்தையும் மறந்து வேங்கடவனே கதி என்று வாழ்ந்தார்.

ஒருநாள் வேங்கடமுடையான் வயோதிகர் கோலத்தில் அவர்முன் தோன்றினார். ஒரு சாளக்கிராமத்தைக் கொடுத்து, “இதையே திருமலையப்பனாக ஊருக்கு எடுத்துச் சென்று வழிபட்டுவருவாயாக. இவருக்கு உருவம் இல்லை என்றாலும் உனக்கு பக்தி இருந்தால் இவரே திருவுருவம் தாங்கி சேவை தருவார்” என்று சொன்னார்.

காணாமல் போன திருமேனி

சேங்கனூருக்குத் தன் மனைவியுடன் திரும்பியவர் தினமும் சாளக்கிராமத்துக்குப் பூஜை செய்தார். ஒருநாள் வழக்கம்போலக் கொள்ளிடக் கரைக்குச் சென்று சாளக்கிராமத்தை மரத்தடியில் வைத்துவிட்டு நீராடச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த இடத்தில் திருமேனியைக் காணவில்லை. அதே நினைவில் பலநாள் அன்ன ஆகாரமின்றி ஊண் உறக்கமின்றி கொள்ளிடக் கரை முழுவதும் அலைந்து தேடினார். ஒருநாள் கனவில் பெருமாள் தோன்றி, “எந்த இடத்தில் வைத்தாயோ அதே இடத்தில் தேடு” என்றார்.

கிருஷ்ணசூரியும் சாளக்கிராமத் திருமேனி வைத்த இடத்துக்குச் சென்று மணலைத் தோண்டிய போது திருமலையின் ஸ்ரீனிவாசப் பெருமாள் அர்ச்சாவிக்ரக உருவமாக உருமாறியிருந்தார். அங்கிருந்து திருமேனியை ஒரு வண்டியிலேற்றி வந்தபோது ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வண்டியின் அச்சு முறிந்து பெருமாள் எழுந்து நின்றார். அங்கிருந்து அவரை வேறு இடத்துக்கு நகர்த்த முடியவில்லை. அதுவே பெருமாள் உறைய உகந்த இடம் என்பதை உணர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் என நாமகரணம் செய்து அந்த இடத்திலேயே கோயிலைக் கட்டி குடமுழுக்கும் செய்தார் கிருஷ்ணசூரி.



ஞானாசிரியன் பெரியவாச்சான் பிள்ளை

ஒருமுறை கிருஷ்ணசூரி, திருவரங்கநாதனைத் தரிசிக்கச் சென்றார். நம்பிள்ளை என்பவர் இவரது பக்தியையும் ஞானத்தையும் அறிந்து தமது சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அபயம் அளிப்பதில் அரசன் போன்றவர் என்னும் சொல்லை ‘ஆச்சான்’என வைணவப் பரம்பரையினர் வழங்குவர். அவர் அறிவு, ஞானம் சொற்பிரயோகம் ஆகியவற்றை தர்க்கம், விவாதம் மூலம் தெளியவைத்து முன்னிலை வகிக்கும் தன்மை கிருஷ்ணசூரிக்கு இருந்ததால் அவருக்கு, ‘பெரியவாச்சான் பிள்ளை’ என்று திருநாமம் சூட்டினார்.

ஸ்ரீராமானுஜர் காலத்தில்தான் முதன் முதலில் திவ்யப்பிரபந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை எழுதப்பட்டது. பெரியவாச்சான் பிள்ளையின் திறமையை நன்கு உணர்ந்த நம்பிள்ளை இவரைத் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய நிகரில்லாத விளக்க உரை ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்து விளக்கம் தருவதில் சிறந்தவர் என்ற பொருளில், ‘வியாக்யான சக்ரவர்த்தி’ எனவும் அழைக்கப்பட்டார்.

இவரது வியாக்யானம் மற்றும் நூல்களுக்குக் கிரந்தங்கள் என்று பெயர். இவர் அங்கு இருந்தபோது சுமார் 60 கிரந்தங்கள் செய்திருக்கிறார். அவர் தொகுத்த ‘திவ்யப் பிரபந்த பாசுரப்படி ராமாயணம்’ மிக அருமையான பாசுர நூல். திருவரங்கத்தில் பல அற்புதங்களும் சமூக சீர்திருத்தங்களும் செய்த பெரியவச்சான் பிள்ளை தமது இறுதிக் காலத்தைச் சேங்கனூரில் இருந்து அருளும் திருமலை னிவாசப் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்ய மீண்டும் திரும்பி வந்தார். 95 வயதுவரை வாழ்ந்து, ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். அவர் தனது சகோதரியின் மகனான நாயனாச்சான் பிள்ளை என்பவரை ஸ்வீகாரம் கொண்டு, தான் பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.

ஞானம் நல்கும் பெருமான்

சேய்ஞலூர் கீழ வீதியில் உள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணசூரியால் கட்டப்பட்ட திருக்கோயில். திருமலையில் இருந்து வேங்கடேசப் பெருமாள் சாளக்கிராம வடிவில் கிருஷ்ணசூரி மூலம் சேங்கனூரை அடைந்து கிழக்கு நோக்கி சுமார் ஏழரை அடி உயரத்துக்கு மேல் திருமலையில் அருளும் அதே வடிவில் காட்சிதருகிறார். திருமலையைப் போல் இங்கும் தாயாருக்குத் தனிச் சன்னிதி கிடையாது. திருமார்பிலேயே உறைகிறாள். அதைத் தவிர ஸ்ரீசுதர்சன ஆழ்வாருக்கு எனத் தனிச் சன்னிதி உண்டு.

காலை ஏழரை முதல் பதினோரு மணி வரையும், மாலை ஐந்து மணி முதல் ஏழு மணிவரையும் பொதுமக்கள் தரிசனத்துக்காகக் கோயில் திறந்திருக்கும். திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையைச் செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம். அங்கப் பிரதட்சிணம் செய்தல், ஆறு சிரவண தீபம் கண்டு தோஷங்கள் விலகிப் பலன் பெறுதல், வார சனிக்கிழமைகளில் தவறாமல் தரிசனம் செய்தல் , ஞானாசிரியனான பெரியவாச்சான் பிள்ளை மூலம் தம் மக்களின் கல்வி மேன்மையுற பெருமாளிடம் வேண்டிக்கொண்டு மாலை சார்த்தி திருமஞ்சனம் செய்தல் போன்றவை இங்கே நடைபெறுகின்றன.

ஜனவரி 26-ம் தேதி திருக்கோயில் புனர்ஸ்தாபன தினத்தை முன்னிட்டு அன்று திருக்கல்யாண உற்சவமும் இரவு கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகின்றன. பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரத் திருநட்சத்திரமான ஆவணி ரோகினி, ராம நவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பிரார்த்தனை திருமஞ்சனமும் அர்ச்சனையும் நடைபெறுகிறது. எல்லோரும் எப்போதும் மலைக்கு வந்து தரிசனம் செய்ய எளிதாக பெரியவாச்சான் பிள்ளை மூலம் மடுவுக்கு வந்து கொள்ளிடத்தின் மண்ணியாற்றங்கரையில் நின்று அருள்செய்கிறார் ஸ்ரீனிவாசப் பெருமாள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்