ஜனாதிபதி உமர் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கே ஒரு எகிப்தியர் வந்தார்.
“அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக!” என்று முகமன் கூறினார். உமரும் பதில் முகமன் தெரிவித்தார்.
அந்த வழிப்போக்கர் ஜனாதிபதியின் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.
“ஜனாதிபதி அவர்களே! நான் ஒரு வழக்கு சம்பந்தமாக தங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதேசமயம், பாதுகாப்பும் கிடைக்கும் என்று தாங்கள் உறுதி அளிக்கும் பட்சத்தில் என் வழக்கை முறையிடுவேன்!” என்று நிபந்தனை விதித்தார்.
“கண்டிப்பாக. நீதியும், பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன். அச்சப்படாமல் விஷயத்தைச் சொல்லுங்கள்!” என்றார் ஜனாதிபதி உமர்.
“எகிப்தின் கவர்னர் அமர் பின் அல்ஆஸ், குதிரைப் பந்தயம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டார். அரேபியர்களைப் போலவே எகிப்துவாசிகளான நாங்களும் குதிரைகள் மீது அதிகம் நேசத்தை வைத்திருப்பவர்கள். எங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகவே பல பந்தயக்குதிரைகள் உண்டு. அதனால், எதிர்பார்த்திருந்த குதிரைப் பந்தய அறிவிப்பு எங்களுக்கு உற்சாகமூட்டியதோடு, அதில் பங்கெடுக்கவும் வைத்தது. அந்தப் பந்தயத்தில் என் குதிரை நிச்சயம் வெற்றி பெறும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் இருந்தது.
இதைப்போல, அமரின் மகன் முஹம்மதுவும் அந்தக் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொண்டார். போட்டி ஆரம்பித்தது.
“குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயின. ஒவ்வொரு முறையும் குதிரைகள் பந்தய மைதானத்தைச் சுற்றி வரும்போது, முன்னணியில் இருந்த குதிரை தெளிவாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த என் குதிரை, பிறகு மின்னல் வேகத்தில் எல்லா குதிரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றி இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது. இரண்டாவது சுற்றிலும் இவ்வாறுதான் நடந்தது. மூன்றாவது சுற்றான இறுதிச் சுற்றில், திடீரென கவர்னரின் மகன் முஹம்மது, ‘என் குதிரை முன்னால் வருகிறது.. என் குதிரை முன்னால் வருகிறது!’ என்று எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்தார்.
“ஆனால், அந்தச் சுற்றிலும் எனது குதிரைதான் நாலுகால் பாய்ச்சலில் முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் எழுந்து நின்று குதித்து நடனமாட ஆரம்பித்தேன். இறைவன் அருளால் என் குதிரை வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டது. அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. என்னிடம் வந்த கவர்னரின் மகன், எந்த விதமான காரணமும் இல்லாமல், ‘நீ வெகு சாதாரணமானவன். நானோ சிறப்புக்குரிய கவர்னரின் மகன்! என்னோடவா போட்டி போட்டு ஜெயிக்கிறாய்?’ என்று என்னை சவுக்கால் விளாச ஆரம்பித்தார்.
“இதற்குப் பிறகு நடந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை ஜனாதிபதி அவர்களே..!” என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த எகிப்தியரின் கண்கள் கலங்கிவிட்டன. அவரின் தோள் மீது பரிவோடு கையைப் போட்ட உமர், சமாதானப்படுத்தும் விதமாக மென்மையாகத் தட்டிக் கொடுத்தார்.
சற்று நேர மௌனத்துக்குப்பின், கண்களைத் துடைத்துக்கொண்ட அந்த எகிப்தியர், “இந்த விஷயத்தை நான் எங்கே தங்களிடம் சொல்லிவிடப் போகிறோனோ என்று பயந்துபோன கவர்னரின் மகன், அப்பாவியான என்னைப் பொய்க் குற்றச்சாட்டுகளோடு சிறையில் அடைத்துவிட்டார்.
“சிறையில் என் கதையைக் கேட்ட சிறைக்காலவர் ஒருவர் இரக்கப்பட்டிருக்காவிட்டால், நான் இந்நேரம் தங்கள் முன் அமர்ந்திருக்க முடியாது! என் வழக்கையும் முறையிட்டிருக்க முடியாது!” என்றார் கனத்த குரலோடு.
மவுனத்தில் ஆழ்ந்த ஜனாதிபதி
நடந்ததைக் கேள்விப்பட்ட ஜனாதிபதி உமர், மவுனத்தில் மூழ்கிவிட்டார். சற்று நேரம் கழித்து, “நிம்மதியாக இருங்கள் சகோதரரே! உங்களுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். அதுவரை தாங்கள் இங்கேயே எனது விருந்தாளியாக தங்கியிருக்கலாம்!” என்று ஆறுதல் சொன்னார்.
அதன் பிறகு, ஜனாதிபதி உமர் எகிப்தின் கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘கவர்னரும், அவரது மகனும் உடனடியாகத் தலைநகர் மதீனாவுக்கு வந்துசேர வேண்டும்’ என்று அதில் ஆணை பிறப்பித்தார்.
ஜனாதிபதியின் கடிதம் கண்டு அம்ர் பின் அல்ஆஸ் பதறிவிட்டார். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பது மட்டும் தெளிவாகவே புரிந்தது. தனது மகனை அழைத்து, “என்ன நடந்தது?” என்று கவலையுடன் விசாரிக்க, மகனோ, ‘‘ஒன்றுமில்லையப்பா!’’ என்று சமாளித்தார்.
நீண்ட பயணத்துக்குப் பிறகு, கவர்னர் அம்ர் பின் அல்ஆஸ்ஸீம், அவரது மகன் முஹம்மதுவும் மதீனாவை அடைந்தனர். நேராக ‘மஸ்ஜிதுன் நபவீ’யை இருவரும் அடைந்தார்கள்.
அங்கு மக்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது. தமது மதிப்புக்குரிய தோழரும், எகிப்தின் கவர்னருமான அம்ர் பின் அல்ஆஸைக் கண்டதும் மக்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சற்று நேரத்தில் ஜனாதிபதி உமரும் அங்கு வந்து சேர்ந்தார். வழக்கமான சம்பிரதாய உபசரிப்புகள், நடைமுறைகள் ஏதுமின்றி விசாரணையை நேரிடையாகவே துவக்கினார்.
“எங்கே உமது மகன்?”
தந்தைக்குப் பின்புறம் நின்றிருந்த முஹம்மது தலை குனிந்தவாறே முன்னால் வந்து நின்றார்.
“எங்கே அந்த எகிப்தியர்?”
“இதோ..! இங்கே இருக்கிறேன் ஜனாதிபதி அவர்களே!”
ஜனாதிபதி உமர் தம்மிடமிருந்த சவுக்கை எடுத்து எகிப்தியரிடம் நீட்டினார்.
“ம்.. உங்களைச் சவுக்கால் அடித்தது போலவே இதோ இந்த கவர்னரின் மகனையும் சவுக்கால் விளாசுங்கள்!” என்று ஆணை பிறப்பித்தார்.
சவுக்கைப் பெற்றுக்கொண்ட அந்த எகிப்தியர் கவர்னர் அம்ர் பின் அல்ஆஸின் மகனைச் சாட்டையால் விளாச ஆரம்பித்தார்.
உமரோ முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளவில்லை.
“ம்.. இன்னும் வேகமாக அடியுங்கள்.. பயப்பட வேண்டாம்! நான் இருக்கிறேன்.. இன்னும் வேகமாக அடியுங்கள்!” என்று தைரியமூட்டினார்.
எகிப்தியர் சவுக்கால் அடித்து முடித்ததும், கவர்னரின் மகனான முஹம்மது அங்கிருந்து தலைகுனிந்தவாறே அகன்றார்.
“ஒவ்வொரு மனிதரும் தாயின் கருவறையிலிருந்து சுதந்திரமானவர்களாகப் பிறக்கிறார். அவர்களை நீங்கள் எப்போது அடிமைப்படுத்த ஆரம்பித்தீர்கள் அம்ர்?” என்று காட்டமான குரலில் கேட்டார்.
அம்ர் தனது மகன் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி உமர் எகிப்தியரின் பக்கம் திரும்பினார்.
“சகோதரரே! இனி நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று நிம்மதியாக வாழலாம். மறுபடியும் உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் என்னை அணுகத் தயக்கம் வேண்டாம்!” என்று விடைகொடுத்து அனுப்பி வைத்தார்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” – என்பதை எகிப்தியர் கண்ணாரக் கண்டார். ஜனாதிபதியை வாழ்த்தியவாறே அங்கிருந்து சென்றார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago